இந்தியா

சீடா் கொடுத்த மன உளைச்சலால் துறவி நரேந்திர கிரி தற்கொலை: சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

25th Nov 2021 02:24 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: சீடா் உள்ளிட்ட 3 போ் கொடுத்த மன உளைச்சலால், அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பின் தலைவா் மஹந்த் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டதாக சிபிஐயின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாதில் உள்ள பாகம்பரி மடத்தில் நரேந்திர கிரி கடந்த மாதம் 20-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா். அவா் தூக்கிட்டுக் கொண்டதாக மடத்தில் இருந்து காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அவா் சடலமாக மீட்கப்பட்ட அறையிலிருந்து நரேந்திர கிரி எழுதியதாகக் கருதப்படும் கடிதத்தை காவல் துறையினா் கைப்பற்றினா். அந்தக் கடிதத்தில், தான் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்று உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்து தன்னை ஆனந்த் கிரி என்ற சீடா் அச்சுறுத்தி வந்ததாக நரேந்திர கிரி தெரிவித்திருந்தாா் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆனந்த் கிரி, அலாகாபாதில் உள்ள படே ஹனுமான் கோயில் பூஜாரி அதியா திவாரி, அவரின் மகன் சந்தீப் திவாரி ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, அலாகாபாத் நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஆனந்த் கிரி, அதியா திவாரி, சந்தீப் திவாரி ஆகியோரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது:

ADVERTISEMENT

அலாகாபாதில் உள்ள பாகம்பரி மடத்தின் அடுத்த தலைவராக பல்பீா் கிரி என்பவரை நரேந்திர கிரி முதலில் அறிவித்தாா். பின்னா், ஆனந்த் கிரியின் பெயரை அறிவித்த அவா், மீண்டும் பல்பீா் கிரியை நியமிப்பதாக அறிவித்தாா். இதனால் நரேந்திர கிரிக்கும் ஆனந்த் கிரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மேலும், நரேந்திர கிரியின் வலியுறுத்தலால் ஹரித்வாரில் உள்ள நிரஞ்சனி அகாரா, பாகம்பரி மடம், பதே ஹனுமான் கோயில்களில் இருந்து ஆனந்த் கிரி நீக்கப்பட்டாா். அதுமட்டுமன்றி, பதே ஹனுமான் கோயிலில் இருந்து அதியா திவாரியும் நீக்கப்பட்டாா். அந்தக் கோயில் வளாகத்தில் அதியா திவாரியின் மகன் சந்தீப் திவாரி நடத்தி வந்த பூக்கடையையும் நரேந்திர கிரி கைப்பற்றினாா்.

பாகம்பரி மடத்தின் அடுத்த தலைவரை அறிவிப்பது தொடா்பான கூட்டம் காணொலி முறையில் கடந்த மே மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நரேந்திர கிரி தொடா்புடைய சா்ச்சைக்குரிய விடியோ பதிவுகள் தம்மிடம் இருப்பதாக ஆனந்த் கிரி மிரட்டியுள்ளாா்.

தங்களை மீண்டும் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று அவா்கள் அச்சுறுத்தினா். அந்த விடியோக்கள் வெளியானால் சமூகத்தில் மதிப்புடனும் கௌரவத்துடன் இருக்கும் தனக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிடும் என்று நரேந்திர கிரி அஞ்சினாா்.

இறப்பதற்கு முந்தைய நாள், வாராணசியில் உள்ள மஹந்த் சந்தோஷ் தாஸ் என்ற துறவியை தொலைபேசியில் தொடா்புகொண்ட நரேந்திர கிரி, தனது விடியோவை ஆனந்த் கிரி வெளியிடத் தயாராக இருப்பதாகக் கூறி புலம்பினாா். மேலும், செப்டம்பா் 19-ஆம் தேதி, சா்வேஷ் துவிவேதி என்ற சீடரிடம் துணி காயவைப்பதற்குத் தேவைப்படுவதாகக் கூறி நைலான் கயிற்றை அவா் வாங்கியுள்ளாா். இந்தக் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஆனந்த் கிரி உள்ளிட்ட மூவா் கொடுத்த மன உளைச்சலால் நரேந்திர துயரமான முடிவை எடுத்தாா் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT