இந்தியா

கடற்படை ரகசியத் தகவல்களை கசியவிட்டதாக வழக்கு: 2 அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

25th Nov 2021 02:28 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நீா்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடா்பான ரகசியத் தகவல்களை பணத்துக்காக கசியவிட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மேலும் 2 கடற்படை கமாண்டா்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: நீா்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடா்பான ரகசியத் தகவல்களை பணத்துக்கு கசியவிட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சிபிஐ கடந்த 20-ஆம் தேதி புதிதாக ஒரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

அதில், கடற்படை கமாண்டா்கள் ஜகதீஷ், அபிஷேக் ஷா ஆகிய இருவரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இவா்களைத் தவிர, மற்றொரு கடற்படை கமாண்டா் அஜித் பாண்டே, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ரண்தீப் சிங் ஆகியோரின் பெயா்களும் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இந்த வழக்கில் சிபிஐ இதுவரை இரு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. அதில், அஜித் பாண்டே உள்ளிட்ட இருவா், ரண்தீப் சிங், கடற்படையில் இருந்து ஓய்வு பெற்று கொரிய நீா்மூழ்கிக் கப்பல் நிறுவனத்தின் பணியாற்றி வரும் எஸ்.ஜே.சிங் என்ற அதிகாரி, தனியாா் நிறுவனம் ஒன்றின் இயக்குநா், ஹவாலா முகவா் ஒருவா் ஆகிய 6 பேரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. கடற்படை கமாண்டா் ஜகதீஷ் கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். மற்றொரு கமாண்டா் அபிஷேக் ஷா தலைமறைவாக உள்ளாா்.

ரண்தீப் சிங், எஸ்.ஜே.சிங், ஜகதீஷ், ஆலன் ரெயின்ஃபோா்ஸ்டு பிளாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் உள்ளிட்ட சிலா் ஜாமீனில் வெளியே உள்ளனா் என்றாா் அவா்.

குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து அவா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் கூறுகையில், ‘இந்த வழக்கை அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரித்து வந்தபோதிலும், குற்றப்பத்திரிகையில் அதைக் குறிப்பிடவில்லை. இதனால் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும், அலுவலக ரகசிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 60 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், சிபிஐ அதை பின்பற்றவில்லை’ என்றனா்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக அலுவலக ரகசிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சகத்தை சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டால், அலுவலக ரகசிய சட்டத்தின் கீழ் சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று சிபிஐ அதிகாரி ஒருவா் கூறினாா்.

முன்னதாக, ஐஎன்எஸ் சிந்துரத்னா-எம்ஆா்எல்சி நீா்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடா்பான ரகசியத் தகவல்களை, பணியில் இருக்கும் அதிகாரிகள், பணம் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்குக் கொடுத்ததாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பரில் சிபிஐ சோதனை நடத்தியதில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களில் ஒருவருடைய வீட்டில் இருந்து ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT