இந்தியா

இந்தியாவின் ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் ஷோம்பி ஷார்ஃப்

24th Nov 2021 03:10 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

தில்லியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளராக அமெரிக்காவைச் சேர்ந்த ஷோம்பி ஷார்ஃப் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸால் செய்யப்பட்டுள்ள இந்த நியமனத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
 இது குறித்து தில்லியில் உள்ள ஐநா சபை அலுவலகம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிட்டிருப்பது வருமாறு:
 ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரின் பிரதிநிதியாக நாட்டின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் பணியாற்ற இருக்கும் ஷார்ஃப், நீடிப்புத் திறன் கொண்ட வளர்ச்சி இலக்குகளை சிறப்பாக மீட்டெடுப்பதற்கான கொவைட்-19 உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளும் ஐ.நா.வின் இந்திய திட்டங்களுக்கு தலைமை தாங்குவார்.
 கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஷார்ஃப், தன் வாழ்க்கையை சர்வதேச அளவில், உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பணிகளில் அர்ப்பணித்துள்ளார். சமீபத்தில் ஆர்மீனியா நாட்டில் ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.
 ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தில் (யுஎன்டிபி) பல தலைமைப் பதவிகளை வகித்தவர். ஜார்ஜியா, லெபனான், ஐரோப்பியா, ரஷிய கூட்டமைப்பு போன்ற நாடுகளில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டங்களிலும், காமன்வெல்த் சுதந்திர நாடுகளுக்கான பிராந்திய எய்ட்ஸ் பயிற்சிக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையிலும் பல்வேறு நாடுகளிலும் பெற்ற அனுபவத்தை இந்தியப் பணியில் பயன்படுத்திக்கொள்வார்.
 சுகாதாரம் சார்ந்த பொருளாதாரத் துறையில் படைப்புகளை வெளியிட்டவர். சர்வதேச வளர்ச்சி முகமை, யுஎன்டிபி போன்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். தென்னாப்பிரிக்காவில் எச்ஐவி தொடர்பான மருத்துவப் படிப்பு, அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் பொருளாதார முதுகலைப் பட்டப் படிப்புகளோடு இவர் ரஷிய மொழிகளையும் கற்றவர். தற்போது இந்திய மொழிகளிலும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் என தில்லி ஐ.நா. தகவல் மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா-பூடான் ஆகிய இருநாடுகளுக்குப் பொதுவானதாக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT