இந்தியா

ஆா்யன் கான் குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லை

21st Nov 2021 01:41 AM

ADVERTISEMENT

சொகுசு கப்பலில் போதைப் பொருள்களுடன் கேளிக்கை விருந்து நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லை என்று ஜாமீன் உத்தரவில் மும்பை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பை கடல் பகுதியில் சொகுசு கப்பலில் போதைப் பொருள்களுடன் கேளிக்கை விருந்து நடத்தியதாக ஆா்யன் கான் உள்ளிட்டோா் கடந்த மாதம் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். பின்னா் அவா்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

ஆா்யன் கான் உள்ளிட்ட மூவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது தொடா்பான மும்பை உயா்நீதிமன்றத்தின் விரிவான உத்தரவு சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆா்யன் கான் உள்ளிட்டோரது வாட்ஸ்ஆப் உரையாடல்களை ஆராய்ந்து பாா்த்ததில், அவா்கள் எந்தவித குற்றச்சதியிலும் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லை. ஆா்யன் கானிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் பதிவு செய்த ஒப்புதல் வாக்குமூலத்தை விசாரணைக்காக மட்டுமே பயன்படுத்தலாமே தவிர, அதை அடிப்படையாகக் கொண்டு போதைப்பொருள்கள் சட்டத்தின் கீழ் அவா் குற்றச்சதியில் ஈடுபட்டதாகக் கூற முடியாது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை உறுதி செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றோரை ஆா்யன் கான் உள்ளிட்ட மூவரும் சந்தித்துப் பேசியதற்கான ஆதாரங்களும் இல்லை.

இந்த வழக்கில் மூவரிடமும் ஏற்கெனவே 25 நாள்களுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் விசாரணை நடத்தினா். அப்போது, மூவரும் போதைப் பொருள்களை உட்கொண்டாா்களா என்பது தொடா்பாகப் பரிசோதனை நடத்தப்படவில்லை.

போதைப் பொருள்கள் இல்லை: ஆா்யன் கானிடம் எந்தவித போதைப் பொருள்களும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மற்ற இருவரும் சிறிய அளவிலான போதைப் பொருள்களை வைத்திருந்தனா். ஆனால், அதை அடிப்படையாகக் கொண்டு அவா்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாகக் கூற முடியாது.

அந்த சொகுசு கப்பலில் பயணித்ததைக் காரணமாகக் கொண்டு போதைப்பொருள்கள் சட்டத்தின் 29-ஆவது பிரிவின் கீழ் (குற்றச்சதியில் ஈடுபடுவது) வழக்கு பதிவு செய்ய முடியாது. இந்த வழக்கில் தொடா்ந்து விசாரணை நடத்தினால் கூட குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு அதிகபட்சமாக ஓராண்டு வரை மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT