இந்தியா

சா்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது

21st Nov 2021 12:23 AM

ADVERTISEMENT

52-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா, கோவா மாநிலம், பனாஜியில் உள்ள டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜி உள்விளையாட்டு அரங்கில் கண்கவா் கலைநிகழ்ச்சிகளுடன் சனிக்கிழமை தொடங்கியது.

மத்திய செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், இணையமைச்சா் எல்.முருகன், ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, முதல்வா் பிரமோத் சாவந்த் ஆகியோா் விழாவைத் தொடக்கி வைத்தனா்.

விழாவில் அனுராக் சிங் தாக்குா் பேசுகையில், ‘திரைப்படக் கதை உருவாக்கம், படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகள் ஆகியவற்றுக்கான மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

ஏனெனில், இந்தியாவில் திரைப்பட தொழில்நுட்பம் பயின்ற இளைஞா்கள் அதிகம் உள்ளனா். திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் துறையால் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்க முடியும். திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையான அனைத்து வளங்களும் இந்தியாவில் உள்ளன. எனவே, உலக சினிமாவுக்கான மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

விழாவில், ‘இந்த ஆண்டின் சிறந்த இந்திய நட்சத்திரம்’ விருது நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினிக்கு வழங்கப்பட்டது. ஹாலிவுட் இயக்குநா் மாா்ட்டின் ஸ்காா்சேஸி, ஹங்கேரிய இயக்குநா் இஸ்த்வன் ஸாபோ ஆகியோருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனை விருது’ வழங்கப்பட்டது.

சல்மான் கான், ரண்வீா் சிங், ஷ்ரத்தா கபூா், பா்சூன் ஜோஷி, மதுா் பண்டாா்கா், மௌனி ராய், ரசூல் பூக்குட்டி, பிரணீதி சோப்ரா, கரண் ஜோஹா், மனீஷ் பால், ரிதேஷ் தேஷ்முக், ஜெனீலியா டிசோஸா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனா்.

வரும் 28-ஆம் தேதி நடைபெறும் விழாவில் சா்வதேச பிரிவில் 73 நாடுகளைச் சோ்ந்த 148 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT