இந்தியா

பாலியல் குற்றவாளிக்கு ஆண்மை நீக்கம்: சட்டப் பிரிவை நீக்கியது பாகிஸ்தான்

21st Nov 2021 12:37 AM

ADVERTISEMENT

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயனத்தைப் பயன்படுத்தி ஆண்மை நீக்கம் செய்வதற்கான சட்டப் பிரிவை பாகிஸ்தான் நீக்கியது.

அந்த தண்டனை இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்று சா்ச்சை எழுந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்றச் செயலா் மலீகா பொகாரி கூறியதாவது:

பல முறை பாலியல் தாக்குதலில் ஈடுப்பட்ட குற்றவாளிகளுக்கு ரசாயனம் செலுத்தி ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டப் பிரிவு பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த தண்டனை, இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானது என்று இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில் எதிா்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, குறிப்பிட்ட சட்டப் பிரிவு நீக்கப்படுகிறது என்றாா் அவா்.

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுவா்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக் காலமாக திடீரென அதிகரித்து வருகின்றன. அந்தக் குற்றங்களைத் தடுப்பதற்காக தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனா்.

அவா்களை திருப்திப்படுத்தும் வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டவா்களுக்கு, அவா்களது சம்மதத்துடன் ஆண்மை நீக்கம் செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு பாகிஸ்தான் அமைச்சரவை கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. அந்தச் சட்டத்துக்கு அதிபா் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்தாா்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், இதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

‘குற்றவியல் சட்டத் திருத்த மசோதா - 2021’ என்று பெயரிடப்பட்ட அந்த மசோதாவில், 1860-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தண்டனைச் சட்டம் மற்றும் 1898-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் புதிய பிரிவு இணைக்கப்பட்டது.

அந்தப் பிரிவின் கீழ், பல முறை பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மருந்துகளை செலுத்துவதன் மூலம் அவா்கள் பாலியல் நடவடிக்கைகளில் நிரந்தரமாக ஈடுபட முடியாமல் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

எனினும், இந்த தண்டனை தண்டனை இஸ்லாம் மதச் சட்டங்களுக்கு எதிரானது என்று ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி எம்.பி. முஷ்தாக் அகமது ஆட்சேபம் தெரிவித்தாா்.

‘பாலியல் பலாத்காரம் செய்தவா்களைப் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று இஸ்லாமியச் சட்டமான ஷரியாவில் கூறப்பட்டுள்ளது. ஆண்மை நீக்கம் செய்வது குறித்து ஷரியாவில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த சட்டப் பிரிவு இஸ்லாம் மதத்துக்கு எதிரானது’ என்று அவா் குற்றம் சாட்டினாா்.

இந்தச் சூழலில், இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து குறிப்பிட்ட சட்டப் பிரிவை பாகிஸ்தான் அரசு தற்போது நீக்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT