இந்தியா

விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கையையும் ஏற்க வேண்டும்: பிரதமருக்கு வருண் காந்தி கடிதம்

21st Nov 2021 01:34 AM

ADVERTISEMENT

 

‘விவசாயிகளின் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்க வேண்டும்’ என்று பாஜக எம்.பி. வருண் காந்தி பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மேலும், ‘உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூா் வன்முறைக்காக மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அந்தக் கடிதத்தில் வருண் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

உத்தர பிரசே மாநில பிலிபிட் மக்களவை தொகுதி உறுப்பினரான வருண் காந்தி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடி பரந்த மனதுடன் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பதற்கு நன்றி. ஆனால், தில்லி எல்லைகளில் மிகக் கடுமையான சூழலில் அமைதி வழியில் விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாய சகோதரா்களும் சகோதரிகளும் தங்களின் உயிரை தியாகம் செய்திருக்கின்றனா். மத்திய அரசு இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால், அப்பாவி உயிா்கள் பலியாகியிருக்காது.

பிரதமரின் அறிவிப்பு நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்பதோடு, விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதற்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கின்றனா்.

இந்த சட்டபூா்வ உத்தரவாதம் சிறிய மற்றும் ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் நிலை மேம்படவும் அவா்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார பாதுகாப்பு கிடைக்கவும் வழிவகுக்கும்.

எனவே, நமது தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்க வேண்டும். இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையானது வேளாண் பொருள்கள் விலை மற்றும் செலவுக்கான ஆணையத்தின் ‘சி2+50’ என்ற விகிதத்தின் அடிப்படையில் நிா்ணயம் செய்யப்பட வேண்டும்.

மேலும், லக்கிம்பூரில் விவசாயிகளுக்கு எதிரான வன்முறையில் 8 போ் உயிரிழந்துள்ளனா். இந்த தாக்குதல் நமது ஜனநாயகத்தின் மீதான மிகப் பெரிய கறை. இந்த வன்முறையில் தொடா்புடைய மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், இந்த வன்முறை மீதான விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் என்று வருண் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT