உத்தரப் பிரதேச தலைநகரம் லக்னெவின் மேற்கிலிருந்து 270 கிமீ தொலைவில் உள்ள ஏட்டா மாவட்டத்தின் காவல்நிலையத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் செவ்வாய்கிழமை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஐந்து காவல்துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், பெண் கடத்தப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு திருமணம் செய்துவைக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்காக அல்தாஃப் என்பவர் செவ்வாய்கிழமையன்று காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தை விளக்கிய ஏட்டா காவல்நிலைய தலைவர் ரோஹன் பிரமோத், "காவல்நிலையத்தில் உள்ள கிழிவறைக்கு அந்த இளைஞர் சென்றார். சில நிமிடங்கள் கழித்தும் அவர் திரும்பவில்லை. அங்கு போய் பார்த்தபோது, அவர் உயிரிழந்து கிடந்தார்" என்றார்.
ட்விட்டரில் விடியோ வெளியிட்டு விரிவாக விளக்கிய ரோஹன் பிரமோத், "கறுப்பு ஜாக்கெட் அணிந்திருந்த அவர், ஜாக்கெட்டில் இணைக்கப்பட்டிருந்த சரத்தை, கழிவறையில் உள்ள குழாயில் மாட்டி, கழுத்தை நெரிக்க முயன்றதாக தெரிகிறது. மயக்கமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் 5-10 நிமிடங்களில் உயிரிழந்தார்" என்றார்.
இதில், அலட்சியமாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அல்தாஃப் தந்தை சந்த் மியான் கூறுகையில், "என் மகனை போலீசிடம் ஒப்படைத்தேன். ஆனால், அவர்கள் எனது மகனை தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன்" என்றார்.
இதை கடுமையாக விமரிசித்துள்ள உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், "விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது மிகவும் சந்தேகத்திற்குரியது. அலட்சியமாக இருந்ததாகக் கூறி சில காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது வெறும் கண் துடைப்பு. நீதி கிடைக்கவும், பாஜக ஆட்சியில் காவல்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ‘கோவேக்ஸின் செலுத்தியவா்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடுகள் கிடையாது’
நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குனரகம் உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் இரவு நேர பார்வை மற்றும் ஒலிப்பதிவு கொண்ட சிசிடிவி கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள எத்தனை காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.