இந்தியா

2021-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்

10th Nov 2021 04:14 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

2021-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
 தமிழகத்திலிருந்து மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சார்பில் அவரின் மகன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, வடசென்னை மருத்துவர் மறைந்த திருவேங்கடம் சார்பில் அவரின் குடும்பத்தினர், 106 வயது பாப்பம்மாள் உள்ளிட்டோர் பத்ம விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
 கரோனா நோய்த்தொற்றின் காரணமாக 2020 -ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் காலதாமதமாக கடந்த திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
 நிகழாண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 2021-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகை தர்பார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருது பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார். விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:
 பத்ம விபூஷண்: 15 மொழிகளில் 40,000 பாடல்களைப் பாடிய மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷண் விருதை அவரின் மகன் எஸ்.பி.பி. சரண் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
 பிரபல மருத்துவர் பி.எம்.ஹெக்டே, அகண்ட அலைவரிசையில் ஃபைபர் ஆப்டிகல் தொழில்நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானி நரேந்திர சிங் கபானி, சர்வதேச அளவில் முன்னிலையில் இருக்கும் ஒடியா சிற்பக் கலைஞர் சுதர்சன் சாகு, மறைந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா வஹிதுதீன் கான், தொல்லியல் வல்லுநர் பி.பி.லால் உள்ளிட்ட ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
 பத்ம பூஷண் விருது: பத்ம பூஷண் விருது 10 பேருக்கு வழங்கப்பட்டது. பின்னணிப் பாடகி கே.எஸ். சித்ரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக இருந்தவருமான நிருபேந்தர மிஸ்ரா, முன்னாள் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருதைப் பெற்றனர்.
 அரசியல், பொதுவாழ்க்கையில் சாதனை படைத்த மறைந்த தருண் கோகோய் (அஸ்ஸாம் முன்னாள் முதல்வர்), மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் (முன்னாள் மத்திய அமைச்சர்) ஆகியோருக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவர்களின் குடும்பத்தினர் பெற்றனர்.
 பத்மஸ்ரீ: 102 பேருக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தேசிய கூடைப்பந்து வீராங்கனை பி.அனிதா, வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், பேராசிரியர் சாலமன் பாப்பையா, இயற்கை விவசாயத்தில் புகழ்பெற்ற பாப்பம்மாள், கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், லட்சக்கணக்கான மீனவக் குடும்பங்களுக்கு குறைந்த செலவில் கழிப்பறைகளை நிறுவி சுகாதாரத்தை நிலைநாட்டிய திருச்சியைச் சேர்ந்த சமூக சேவகர் மராச்சி சுப்புராமன், ஐ.டி. துறை தொழில்முனைவோராகி, 5 கோடி பேர் பயன்படுத்தி வரும் மென்பொருள்களைத் தயாரித்த ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றனர்.
 வடசென்னையில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் புரிந்து சாமானிய மக்களுக்கு தொண்டாற்றி மறைந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன், "சந்தமாமா' பத்திரிகையின் கார்ட்டூன் கலைஞரான மறைந்த கே.சி. சிவசங்கர், கியர் தயாரிப்பில் புகழ்பெற்று "கியர் மேன்' என அழைக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் பி.சுப்பிரமணியன் ஆகியோருக்கான பத்மஸ்ரீ விருதுகளை அவர்களின் குடும்பத்தினர் பெற்றனர்.
 40 ஆண்டுகளாக சமூக, கல்வி நோக்கங்களுக்காக பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்திய புதுச்சேரி கேசவசாமியும் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
 பெங்களூரைச் சேர்ந்த பாரா தடகள வீரர் கே.ஒய். வெங்கடேஷ் போன்றோர் பத்ம விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT