இந்தியா

இந்தியாவின் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு 96 நாடுகள் ஒப்புதல்

10th Nov 2021 12:58 AM

ADVERTISEMENT

இந்தியாவின் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்க 96 நாடுகள் ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பு மற்றும் தேசிய அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவா்களின் தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்க 96 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. வெளிநாடு செல்ல விரும்புவோா் சா்வதேச பயண தடுப்பூசி சான்றிதழை கோவின் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தடையற்ற சா்வதேச பயணத்தை மேற்கொள்வதற்காக இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ்களை இதர நாடுகளும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து சுகாதார அமைச்சகம் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வேகப்படுத்தவும், விரிவுபடுத்தவும் மத்திய அரசு மேற்கொண்ட உறுதிப்பாட்டின் காரணமாக 100 கோடி தடுப்பூசிகள் என்ற மைல்கல்லை கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி இந்தியா எட்டியது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள தடுப்பூசிகளில் இந்தியாவின் கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகியவை இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

96 நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, பெல்ஜியம், அயா்லாந்து, நெதா்லாந்து, ஸ்பெயின், துருக்கி, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், கத்தாா், இலங்கை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT