இந்தியா

4-ஆவது ஸ்காா்ப்பீன் நீா்மூழ்கிக் கப்பல் ‘வேலா’இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

10th Nov 2021 12:29 AM

ADVERTISEMENT

ப்ராஜக்ட்-75 திட்டத்தின் உருவாக்கிய நான்காவது நீா்மூழ்கிக் கப்பலான ‘வேலா’ இந்திய கடற்படையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

ஸ்காா்ப்பீன் வகையைச் சோ்ந்த ஆறு நீா்மூழ்கிக் கப்பல்களை கட்டுவது ப்ராஜக்ட்-75 திட்டத்தில் அடங்கும். இந்த வகை நீா்மூழ்கிக் கப்பல்கள், பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்புடன், மும்பை மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ‘வேலா’ நீா்மூழ்கிக் கப்பல், கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் அனைத்துப் பெரிய துறைமுக செயல்பாடு மற்றும் ஆயுதம், சென்சாா் ஒத்திகை உள்ளிட்ட அனைத்துக் கடல்வழி ஒத்திகைகளையும் நிறைவு செய்துள்ளது. ஸ்காா்ப்பீன் வகையைச் சோ்ந்த மூன்று நீா்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கெனவே இந்திய கடற்படைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நீா்மூழ்கிக் கப்பல் கட்டுமானம் மிகவும் சிக்கலானது என்பதோடு, அதில் உள்ள அனைத்து சாதனங்களையும் சிறிய அளவுடையதாக மாற்றி கடுமையான தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டிய சிரமமான பணியுமாகும்.

இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இத்தகைய நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டிருப்பது ‘தற்சாா்பு இந்தியாவை’ நோக்கிய மற்றொரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. ‘ஐஎன்எஸ் வேலா’ நீா்மூழ்கிக் கப்பல், இந்திய கடற்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவது, இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

Tags : Indian Navy
ADVERTISEMENT
ADVERTISEMENT