உச்சநீதிமன்ற வளாகத்தில் மத்தியஸ்த மையம், தேசிய சட்டப் பணிகள் ஆணைய அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
உச்சநீதிமன்ற சட்டப் பணிகள் குழு (எஸ்எஸ்எல்எஸ்சி), மத்தியஸ்தம் மற்றும் சமரச திட்டக் குழு (எம்சிபிசி) ஆகியவற்றின் வழிகாட்டுதலில் உச்சநீதிமன்ற மத்தியஸ்த மையம் செயல்படுகிறது. உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கும் வழக்குகள் அந்த மையத்தில் விசாரிக்கப்படும். இதற்காக அந்த மையத்தில் பயிற்சி பெற்ற 79 மத்தியஸ்தா்கள் உள்ளனா்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கூடுதல் கட்டட வளாகத்தில் புதிதாக மத்தியஸ்த மையம், தேசிய சட்டப் பணிகள் ஆணைய அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், சஞ்சய் கிஷண் கெளல், உதய் உமேஷ் லலித் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவா்களில் ஏ.எம்.கான்வில்கா் எஸ்எஸ்எல்எஸ்சி தலைவராகவும், சஞ்சய் கிஷண் கெளல் எம்சிபிசி உறுப்பினராகவும் உள்ளனா். உதய் உமேஷ் லலித் தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் நிா்வாகத் தலைவராக பதவி வகிக்கிறாா்.