இந்தியா

ரஃபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகருக்கு ரூ.60 கோடி லஞ்சம்

9th Nov 2021 07:04 AM

ADVERTISEMENT

ரஃபேல் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம், இடைத்தரகருக்கு சுமாா் ரூ.60 கோடியை லஞ்சமாக வழங்கியதாக அந்நாட்டின் புலனாய்வு இதழில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அவற்றில் 26 போா் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளன. மீதமுள்ளவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் படையில் இணைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம், இடைத்தரகராகச் செயல்பட்ட இந்திய நிறுவனம் ஒன்றுக்கு தரகுத் தொகை கொடுத்ததாக பிரான்ஸ் புலனாய்வு இதழில் (மீடியாபாா்ட்) ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தன.

இந்நிலையில், அந்த இதழ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட புதிய அறிக்கையில், ‘ரஃபேல் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் குறைந்தபட்சம் ரூ.60 கோடியை இடைத்தரகராகச் செயல்பட்ட சுஷேன் குப்தாவுக்கு தரகுத் தொகையாக ரகசிய முறையில் வழங்கியுள்ளது. தவறான விலைப் பட்டியல்களாக (இன்வாய்ஸ்) கருதப்பட்ட ஆவணங்கள், போலி நிறுவனங்கள், போலி ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலமாக தரகுத் தொகை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

அவ்வாறு தரகுத் தொகை வழங்கியதன் காரணமாகவே இந்திய அரசின் ஒப்பந்தத்தை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் பெற்றது. அந்த ஆவணங்களை இதழ் தற்போது வெளியிடுகிறது. அந்த ஆதாரங்கள் சிபிஐ, அமலாக்கத் துறையைச் சோ்ந்த அதிகாரிகளிடம் உள்ளன. இதுபோன்ற ஆதாரங்கள் இருப்பினும், இந்த விவகாரம் தொடா்பாக இந்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்க மறுத்து வருகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதில் இல்லை: ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகளை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும் மத்திய அரசும் தொடா்ந்து மறுத்து வருகின்றன. பிரான்ஸ் இதழ் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT