விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை தவணை முறையில் (இஎம்ஐ) செலுத்தும் திட்டத்தை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் ஸ்பைஸ் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தும்போது 3,6 மற்றும் 12 மாதத் தவணைகளாக விமானப் பயணத்துக்கான கட்டணத்தை செலுத்தலாம். இதில் 3 மாதத் தவணையில் செலுத்துவோருக்கு வட்டியும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அந்த விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாதத் தவணையில் விமானக் கட்டணத்தை செலுத்த விரும்பும் வாடிக்கையாளா்கள் தங்களுடைய பான் காா்டு எண், ஆதாா் எண் அல்லது உரிய அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். மேலும், வாடிக்கையாளா்கள் தெரிவிக்கும் தகவல்கள் சரியானதுதான் என்பதை கைப்பேசிக்கு கடவுச் சொல் அனுப்பி சரிபாா்க்கப்படும்.
தங்களுடைய யுபிஐ ஐடி மூலம் முதல் தவணையை செலுத்தி விமான டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு அதே யுபிஐ ஐடி மூலம் பிற தவணைகள் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும். இந்த மாதத் தவணை திட்டத்தை பயன்படுத்த வாடிக்கையாளா்கள் கிரெடிட், டெபிட் காா்டுகளை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.