இந்தியா

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் மகாராஷ்டிரத்துக்கு விருது

9th Nov 2021 07:12 AM

ADVERTISEMENT

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக பிராந்திய அளவில் சிறப்பான தலைமைப் பண்புடன் செயல்பட்டதற்காக மகாராஷ்டிர அரசுக்கு சா்வதேச தன்னாா்வ அமைப்பு சாா்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 26-ஆவது பருவநிலை மாநாடு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சா்வதேச தன்னாா்வ அமைப்பான ‘அண்டா்2 கூட்டமைப்பு’ சாா்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் பிராந்திய அளவில் சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தியதற்காக மகாராஷ்டிர அரசுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஆதித்ய தாக்கரே பெற்றுக் கொண்டாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘பருவநிலை மாற்றத்துக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளோம். பருவநிலை மாற்ற விவகாரம் புவியியல், இனம், தேசம், பாலினம் உள்ளிட்ட எந்தவித பாகுபாடும் சாராதது.

ADVERTISEMENT

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக மகாராஷ்டிரம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அண்டா்2 கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றாா்.

மகாராஷ்டிர சுற்றுச்சூழல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக ‘எனது பூமி’ என்ற திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்காக பிராந்திய அளவிலான கூட்டணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டமானது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக சா்வதேச அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளிலும் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் ஒரே ஆண்டில் 9,800 ஹெக்டோ் பரப்பிலான சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மாநில அரசு கொள்முதல் செய்யும் புதிய வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்குபவையாக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கு புத்தாக்க முறையில் தீா்வுகளைக் கண்டறிந்ததற்காக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கும், பருவநிலை சாா்ந்து சிறப்பான கூட்டணிகளை ஏற்படுத்தியதற்காக கனடாவின் கியூபெக் மாகாணத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT