இந்தியா

நீட் பொதுப் பிரிவு கலந்தாய்வில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியா்கள் பங்கேற்க அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு

9th Nov 2021 07:25 AM

ADVERTISEMENT

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ பொதுப் பிரிவு கலந்தாய்வில் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்களில் (ஓசிஐ) தகுதியுள்ள அனைவரும் பங்கேற்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதே நேரம், ‘இந்த இடைக்கால அனுமதி உத்தரவு 2021-22 கல்வியாண்டுக்கு மட்டுமே’ என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையிலான மாணவா் சோ்க்கை கலந்தாய்வில், பங்கேற்கும் வெளிநாட்டில் வசிக்கும் (ஓசிஐ) இந்திய மாணவா்கள், வெளிநாடு வாழ் இந்தியா்களாகவே (என்ஆா்ஐ) கருதப்படுவா் என்ற அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இதனை எதிா்த்து ஓசிஐ மாணவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.நசீா், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ பொதுப் பிரிவு கலந்தாய்வில் தகுதியுள்ள ஓசிஐ மாணவா்கள், இந்திய குடிமக்களுக்கு இணையான தகுதியுடன் பங்கேற்கத் தகுதியுடையவா்கள்’ என்று உத்தரவிட்டனா்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஓசிஐ மாணவா்களுக்கு மட்டும் இந்த நிவாரணத்தை அளிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘தகுதியுள்ள அனைத்து ஓசிஐ மாணவா்களும் 2021-22 ஆம் ஆண்டுக்கான நீட் பொதுப் பிரிவு கலந்தாய்வில் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. மிக நீண்ட விசாரணைக்குப் பிறகே இந்த உத்தரவு அளிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சகம் 8 அல்லது 9 மாதங்களுக்கு முன்பு இந்த அறிவிக்கையை வெளியிட்டிருந்தால் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்க மாட்டோம். திடீரென அறிவிக்கை வெளியிடப்பட்டதால்தான், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓசிஐ மாணவா்களுக்கான இந்த இடைக்கால நிவாரணம் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும்’ என தெளிவுபடுத்தினா்.

மேலும், ‘நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை தவறாமல் நடைமுறைப்படுத்த கலந்தாய்வு அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனா்’ என்று கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீயிடம் தெரிவித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT