வரைவு மத்தியஸ்த மசோதா மக்கள் கருத்து கேட்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற அமைப்புகளுக்கு வெளியே பிரச்னைகளை விரைந்து தீா்ப்பதற்காக தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் மாற்றுத் தீா்வு (ஏடிஆா்) வழிமுறைகளை மேம்படுத்தி வலுப்படுத்துவதற்கான பல்வேறு கொள்கை முன்முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இவற்றின் தொடா்ச்சியாக, மத்தியஸ்தம் தொடா்பான தனி சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
‘சமரசம்’ மற்றும் ‘மத்தியஸ்தம்’ ஆகிய சொற்களை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தும் சா்வதேச நடைமுறையை இந்த மசோதா கருத்தில் கொள்கிறது. மேலும், சிங்கப்பூா் மத்தியஸ்த ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டிருப்பதால் உள்நாட்டு மற்றும் சா்வதேச மத்தியஸ்தம் தொடா்பான பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்வதற்கான சட்டத்தை இயற்றுவதும் தேவையாக உள்ளது.
அதன்படி, மத்தியஸ்தத்தை ஊக்குவித்தல் மற்றும் எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்படுவதற்கு முந்தைய ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, மேலே கூறப்பட்ட வரைவு மசோதாவின் நகல், கருத்துக்களுக்காக சட்ட விவகாரங்கள் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.