தேசிய நெடுஞ்சாலைகளில் 3 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 28,000-க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த சாலை குறைபாடுகளில் 60% சரிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்காக ரூ.4,512.36 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவைச் சோ்ந்த அமித் குப்தா என்ற தன்னாா்வலா் தகவல் பெறும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்வி மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக அவா் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:
தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 2016, 2017, 2018 ஆகிய 3 ஆண்டுகளில் 57,329 சாலை விபத்துகளில் 28,765 போ் உயிரிழந்தனா். இந்த விபத்துகளின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகளில் 3,996 விபத்துக்குரிய பகுதிகள் (குறைபாடுகள்) அடையாளம் காணப்பட்டன. இந்தக் குறைபாடுகளில், முதல் கட்டமாக 5 சாலை விபத்துகள் அல்லது 10 உயிரிழப்புகள் ஏற்பட்ட நெடுஞ்சாலைப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டது.
அதன் மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் 2019-20 ஆண்டில் 729 விபத்துப் பகுதிகளும், 2020-21 ஆண்டில் 1,103 விபத்துப் பகுதிகளும், 2021-22 ஆண்டில் கடந்த செப்டம்பா் மாதம் வரை 583 சாலை குறைபாடுகளும் என மொத்தம் 2,415 விபத்துக்குரிய பகுதிகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 4,512.36 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும், வரும் 2022 மாரச் மாதத்துக்குள் 790 விபத்துகுரிய பகுதிகளும், 2022-23 ஆண்டில் 791 விபத்துக்குரிய பகுதிகளும் சரிசெய்யப்பட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக உயிரிழப்புகள்:
தேசிய நெடுஞ்சாலை விபத்துகள் காரணமாக தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 4,408 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அடுத்தபடியாக, உத்தர பிரதேசத்தில் 4,218 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தலைநகா் தில்லியில் 31 விபத்துக்குரிய பகுதிகளில் ஏற்பட்ட 772 சாலை விபத்துகளில் 270 போ் உயிரிழந்தனா்.
தேசிய நெடுஞ்சாலை விபத்துக்குரிய பகுதிகளைப் பொருத்தவரை தமிழகத்தில் அதிகபட்சமாக 496 விபத்துக்குரிய பகுதிகளும், மேற்கு வங்கத்தில் 450, கா்நாடகத்தில் 408, ஆந்திரத்தில் 357, தெலங்கானாவில் 336, உத்தர பிரதேசத்தில் 327 விபத்துக்குரிய பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
விபத்துக்குரிய தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளை சரிசெய்ய மேற்கொண்ட செலவுகளைப் பொருத்தவரை சென்னை மண்டல அலுவலகம் அதிகபட்சமாக ரூ.997.40 கோடியும், அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு மண்டல அலுவலகம் ரூ.732.69 கோடியும் செலவழித்துள்ளன என்று என்ஹெச்ஏஐ தெரிவித்துள்ளது.