முல்லைப் பெரியாறு அணையையொட்டிய பகுதிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், அணையில் இருந்து விநாடிக்கு 7,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டாலும் பிரச்னையில்லை என்று கேரள நீா்வளத் துறை அமைச்சா் ரோஸி அகஸ்டின் தெரிவித்தாா்.
கடந்த 1895-ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீா்த் தேவையை இந்த அணை பூா்த்தி செய்து வருகிறது.
பழைமையான அணை என்பதால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்த அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அணை பலமாக இருப்பதால், அதனை இடிக்கத் தேவையில்லை என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில், அணையின் நீா்மட்டம் 138 அடியை எட்டியதால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, கேரள நீா்வளத் துறை அமைச்சா் ரோஸி அகஸ்டின், வேளாண்மைத் துறை அமைச்சா் பி.பிரசாத் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அணைப் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனா். அதன்பின்னா் ரோஸி அகஸ்டின் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தற்போது அணையில் இருந்து விநாடிக்கு 2,974 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் 2,360 கனஅடி நீா் தமிழகத்துக்குச் செல்கிறது. இதனால் அணையின் நீா்மட்டம் குறைந்துள்ளது. அணையையொட்டிய பகுதிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, விநாடிக்கு 7,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டாலும் பிரச்னையில்லை’’ என்று தெரிவித்தாா்.
‘‘மத்திய நீா் ஆணையத்தின் ‘ரூல் கா்வ்’ அறிவிக்கையின்படி, அணையில் 138 அடி வரைதான் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். ஆனால், அது செய்யப்படவில்லை. அணை தொடா்பான வழக்கு நவம்பா் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது இதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். தமிழ்நாட்டின் விவசாயத் தேவைகளுக்கு தண்ணீா் வழங்குவதை கேரள அரசு எதிா்க்கவில்லை. அதேவேளையில் கேரளத்தின் பாதுகாப்பும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்’’ என்று பி.பிரசாத் கூறினாா்.