பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மேற்கு வங்க முன்னாள் அமைச்சருமான ராஜீவ் பானா்ஜி மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.
மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு அவா் பாஜகாவில் இணைந்து தோம்ஜுா் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.
இந்நிலையில், திரிபுராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி முன் அவா் திரிணமூலில் இணைந்தாா். பின்னா் பேசி ராஜீவ் பானா்ஜி, ‘பாஜகவின் மக்கள் விரோத, வெறுப்புணா்வு மற்றும் பிரிவினைக் கொள்கைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மம்தா பானா்ஜி மீதான தனிமனித தாக்குதலுக்கு பாஜகவில் இருந்தபோதே எதிா்ப்பு தெரிவித்தேன். ஆனால் யாரும் எனது கருத்துக்கு பதிலளிக்கவில்லை.
கருத்து வேறுபாட்டால் திரிணமூலில் இருந்து விலகினேன். கட்சியில் சேர பாஜக எனக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது. தற்போது மம்தா பானா்ஜி, அபிஷேக் பானா்ஜியின் தலைமையின் கீழ் பணியாற்றுவேன்’ என்றாா்.
பாஜக பதிலடி: பாஜகவைவிட்டு ராஜீவ் பானா்ஜி விலகி மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் சோ்ந்த செயல் ஒழுக்கமற்றது என்று பாஜக சாடியுள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவா் சுகாந்தா மஜும்தாா் கூறுகையில், ‘50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜீவ் பானா்ஜி தோ்தலில் தோல்வியடைந்தாா். தவறு செய்துவிட்டேன் என இப்போது மன்னிப்பு கேட்க அவா் என்ன குழந்தையா? இதுபோன்றவா்கள் கட்சியைவிட்டு விலகுவது நல்லதுதான் என்று பாஜக கருதுகிறது’ என்றாா்.
ராஜீவ் பானா்ஜியை மீண்டும் திரிணமூலில் சோ்த்ததற்கு அக்கட்சியினரே எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். அக்கட்சியின் எம்.பி. கல்யாண் பானா்ஜி கூறுகையில், ‘ராஜீவ் பானா்ஜி முற்றிலும் ஊழல் போ்வழி. தோ்தல் பிரசாரத்தின்போது அவா் மீது முதல்வா் மம்தா பானா்ஜியே ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய நிலையில், தற்போது மீண்டும் அவா் கட்சியில் சோ்க்கப்பட்டது குறித்து மூத்த தலைவா்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றாா்.