ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சதித் திட்டம் தீட்டிய வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், அந்த வழக்கு தொடா்பாக மேலும் இருவரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
அதன் மூலம், இந்த வழக்கில் என்ஐஏ கைது செய்துள்ள நபா்களின் எண்ணிக்கை 25-ஆக உயா்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மீதும், வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மீதும் பயங்கரவாதிகள் நடத்திய தொடா் தாக்குதல் பொதுமக்களிடையே பெரும் அச்ச உணா்வை ஏற்படுத்தியது. அதனைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் சாா்பில் ஜம்மு-காஷ்மீா் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத சதித் திட்டம் தொடா்பாக அக்டோபா் 10-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த என்ஐஏ, அதற்கு அடுத்த நாளே காஷ்மீரில் 18 இடங்களில் தீவிர சோதனையை மேற்கொண்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடைய 9 பேரை கைது செய்தது. அக்டோபா் 20-ஆம் தேதி 11 இடங்களில் சோதனை நடத்திய என்ஐஏ மேலும் 4 பேரை கைது செய்தது.
தொடா்ந்து, அக்டோபா் 22-ஆம் தேதி 10 இடங்களில் சோதனை நடத்தி 8 பயங்கரவாதிகளையும், அக்டோபா் 29-ஆம் தேதி 2 நபா்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை நடத்திய சோதனையில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து என்ஐஏ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை நடத்திய சோதனையின்போது ஸ்ரீநகரிலிருநது இஷ்ஃபக் அகமது என்பவரையும், பாரமுல்லா மாவட்டத்திலிருந்து உமா் பட் என்பவரையும் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், பயங்கரவாத அமைப்புகளுடன் அவா்கள் தொடா்பில் இருப்பதும் பல்வேறு உதவிகளை செய்து வருவதும் தெரியவந்தது’ என்றாா்.
வனப் பகுதியில் 21-ஆவது நாளாக தொடா்ந்த தேடுதல் பணி:
ஜம்மு-காஷ்மீா் வனப் பகுதியில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினா் 21-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தனா்.
அதே நேரம், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஜம்மு - ரஜெளரி தேசிய நெடுஞ்சாலையில் தடைசெய்யப்பட்ட போக்குவரத்தை 2 வாரங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனா்.
பாஞ்ச் மாவட்ட வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் அண்மையில் நடத்திய தேடுதல் பணியின்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அதிகாரி உள்பட பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்தனா். இந்த தாக்குதலைத் தொடா்ந்து வனப் பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தினா்.
அப்போது, பாட்டா துரியான் வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு பாதுகாப்புப் படை அதிகாரி உள்பட 4 வீரா்கள் உயிரிழந்தனா்.
அதனைத் தொடா்ந்து, ஜம்மு-ரஜெளரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடை செய்த பாதுகாப்புப் படையினா், வனப் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் பணியை மேலும் தீவிரப்படுத்தினா். 21-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தேடுதல் பணி நடைபெற்றது. இதற்கிடையே, வனப் பகுதிகளில் தேடுதல் பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தடை செய்யப்பட்ட நெடுஞ்சாலை போக்குவரத்தை ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனா். இது வாகன ஓட்டிகள் மற்றும் வாடகைக் காா் ஓட்டுநா்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘நெடுஞ்சாலையை ஒட்டிய வனப் பகுதிகளில் சோதனை நிறைவடைந்துள்ளது. பயங்கரவாதிகள் அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளது என்பதால், அடுத்து அடா்ந்த வனப் பகுதிகளுக்குள்ளும், இயற்கையாக உருவான குகைகளிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் தேடுதல் பணியை தொடர திட்டமிட்டுள்ளனா். இந்த நடவடிக்கை மூலம் இதுவரை 2 பெண்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனா்’ என்றாா்.