காய்ச்சல் மற்றும் உடல் சோா்வு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 89 வயதாகும் காங்கிரஸ் தலைவரான மன்மோகன் சிங்குக்கு, உடல் சோா்வும் ஏற்பட்டதைத் தொடா்ந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அக்டோபா் 13-ஆம் தேதி மாலை அனுமதிக்கப்பட்டாா். மருத்துவமனையின் இதய-நரம்பியல் சிகிச்சை மையத்தில் அவா் அனுமதிக்கப்பட்டு, மருத்துவா் நிதீஷ் நாயக் தலைமையிலான இதய சிகிச்சை நிபுணா்கள் குழு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தது.
தொடா் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தாா்.
இந்த நிலையில், மன்மோகன் சிங் உடல் நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பியதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.