இந்தியா

வென்டிலேட்டரில் 28 நாள்கள்: கரோனாவை வென்ற இளம் தாய்

29th May 2021 11:07 AM

ADVERTISEMENT


ஜெய்ப்பூர்: நாட்டில் கரோனா இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், கரோனா பாதித்து அபாய கட்டத்தில் வென்டிலேட்டர் உதவியோடு 28 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த 27 வயது இளம் பெண், கரோனாவை வென்று குணமடைந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள மருத்துவமனையில், கரோனா தொற்றுடன் சுமார் 32 நாள்கள் போராட்டத்தில் ஒரு நொடி கூட நம்பிக்கையை விட்டுவிடாமல், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து மீண்டு வந்திருக்கும், ரூபாலி ஸ்ரீவத்சவா 28 நாள்கள் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவர் நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் போது மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவரும் கைதட்டி அவருக்கு உற்சாக வழியனுப்பு விழாவை செய்தனர். தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவத் துறையினர் அனைவருக்கும் அவர் கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

அவரது ஆக்ஸிஜன் அளவு வெறும் 30 ஆக இருந்தது. அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் பலனளிக்கவில்லை. இறுதிக்கட்டத்தில்தான் அவர் வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அளிக்கப்பட்ட மருந்துகள் மூலம் அவரது ஆகஸிஜன் அளவு 67.. 72 என உயர்ந்தது.

ADVERTISEMENT

தற்போது அவரது ஆக்ஸிஜன் அளவு 93 ஆக உயர்ந்ததை அடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். 

இது குறித்து ரூபாலி கூறுகையில், நான் எனது 18 மாதக் கைக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு இங்கு 32 நாள்களாக இருந்துள்ளேன். நான் எப்போது வந்தேன் என்பதெல்லாம் எனக்கு நினைவில்லை. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி. எனக்காக என் குழந்தை வீட்டில் காத்திருக்கிறது. அதற்காகவோ என்னவோ நான் இப்போது உயிருடன் உள்ளேன் என்கிறார் நா தழுதழுக்க.
 

Tags : Rajasthan ventilator Covid
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT