இந்தியா

அலிகாரில் போலி மதுபானம் அருந்திய 22 பேர் பலி: 6 பேர் கைது

29th May 2021 05:35 PM

ADVERTISEMENT

 

அலிகரில் சட்டவிரோதமாக மது அருந்தியதில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அலிகார் காவல்துறையினர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்து இந்த வழக்கில் 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய 2 குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு அலட்சியம் குற்றச்சாட்டில் மாவட்ட கலால் அதிகாரி தீரஜ் சர்மா, கலால் ஆய்வாளர் ராஜேஷ் யாதவ், காவலர்கள் அசோக் குமார், சந்திரபிரகாஷ் யாதவ் மற்றும் ராம்ராஜ் ராணா ஆகியோரை இடைநீக்கம் செய்துள்ளனர். 

ADVERTISEMENT

அலிகாரில் ஏழு கிராமங்களில் வியாழக்கிழமை இரவு ஏராளமான மக்கள் நாட்டு மதுபானங்களை உட்கொண்டனர். வெள்ளிக்கிழமை 17 பேர் இறந்தனர், சனிக்கிழமை காலை 5 பேர் இறந்தனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும், எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.

அலிகாரின் லோதா, கைர் மற்றும் ஜவான் தொகுதிகளில் உள்ள மக்கள் வியாழக்கிழமை மாலை வெவ்வேறு மதுபானக் கடைகளிலிருந்து நாட்டு மதுபானங்களை வாங்கி உட்கொண்டனர். இதையடுத்து பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 

இது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாவட்ட நீதிபதி சந்திரபூஷன் சிங் உத்தரவிட்டுள்ளார். நான்கு மதுபான கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டு மதுபான கடைகளும் மூடப்படும். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார். மேலும், அவர்களுக்கு எதிராக தேசியப் பாதுகாப்பு சட்டம் (என்எஸ்ஏ) பயன்படுத்தப்படும் என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT