இந்தியா

மல்யுத்த வீரர் சாகர் ரானா இறந்த சம்பவம்: சுஷீல் குமாரின் கூட்டாளிகள் 4 பேர் கைது

27th May 2021 03:53 AM | நமது நிருபர்

ADVERTISEMENT

 


புது தில்லி: தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த தகராறில் மல்யுத்த வீரர் சாகர் ரானா இறந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைதான ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரர் சுஷீல் குமாரின் கூட்டாளிகள் 4 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தில்லியில் வடக்கு பகுதியில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்தின் உள்ளே மே 4-ஆம் தேதி நள்ளிரவு நடந்த மோதலின் போது, 23 வயதான மல்யுத்த வீரர் சாகர் ரானா உயிரிழந்தார். அவரது இரு நண்பர்கள் சோனு, அமித்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களை சுஷீல் குமார் (38) மற்றும் பிற மல்யுத்த வீரர்கள் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஒரு சொத்துப் பிரச்னை தொடர்பாக நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக மாடல் டவுன் காவல் நிலையத்தில் சுஷீல் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான சுஷீல் குமார், அவரது கூட்டாளி அஜய் (எ) சுனில் (48) ஆகிய இருவரும் தில்லி முன்ட்கா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதில் சுஷீல் குமாரை 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவரது கூட்டாளிகள் 4 பேரை கைது செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். 
இதுதொடர்பாக தில்லி காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: 
சுஷீல் குமாரின் கூட்டாளிகளான காலா அசௌடா மற்றும் நீரஜ் பவானா குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் 4 பேர், காலாவை சந்திப்பதற்காக கேவ்ரா கிராமத்துக்கு வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் தில்லி கஞ்சவாலா பகுதியில் உள்ள கேவ்ரா ரயில்வே கிராசிங் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மறைந்திருந்து அவர்கள் நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், 4 பேரும் மல்யுத்த வீரர் கொலைச் சம்பவத்தில் தங்களுக்குள்ள தொடர்பு மற்றும் பிற நபர்கள் தொடர்புகளையும் தெரிவித்தனர். அவர்கள் குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் தங்களது வாகனங்களையும் ஆயுதங்களையும் போட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது. அவர்கள் நால்வரும் ஹரியாணாவின் சஜ்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த பூபிந்தர் (38), மோகித் (22), குலாப் (24) மற்றும் ரோத்தக் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சித் (29) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் காலா அசௌடா மற்றும் நீரஜ் பவானா குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT