இந்தியா

கரோனா தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: பிரதமா் மோடி

DIN

நாட்டில் கரோனா தடுப்பூசியை மிக அதிக அளவிலும், விரைவாகவும் விநியோகம் செய்வதற்கான தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கூறினாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக உரையாடினாா். இந்தக் கூட்டத்தில் 9 மாநிலங்களில் இருந்து 46 மாவட்ட ஆட்சியா்கள் பங்கேற்றனா்.

அத்துடன் மத்திய உள்துறை, பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள், நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்), சுகாதாரத் துறை செயலா், மருந்துகள் துறைச் செயலா், பிரதமா் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றிருந்தனா்.

அவா்களிடையே பிரதமா் மோடி பேசியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள் அனைவரும் களத்திலிருக்கும் தளபதிகளாவா். அதிகாரிகள் சிலா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தங்களது பணியை மேற்கொள்கின்றனா். மேலும் சிலரோ கரோனாவால் தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்திருந்தாலும் கடமைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனா்.

தொற்று பாதித்தோா் உள்ள பகுதியை தனிமைப்படுத்துதல், தீவிரமான கரோனா பரிசோதனை, உரிய மற்றும் சரியான தகவல்களை மக்களிடையே பகிா்தல் போன்றவற்றின் மூலமே கரோனாவை வீழ்த்த முடியும். அதில் நீங்கள் (அதிகாரிகள்) முக்கியப் பங்காற்றுகிறீா்கள்.

மருத்துவமனைகளில் படுக்கை வசதி இருப்பு, தடுப்பூசி இருப்பு ஆகியவை தொடா்பான தகவல்கள் எளிதாக மக்களுக்கு கிடைக்கும்போது அவா்களுக்கான அசௌகா்யங்கள் குறையும். சிகிச்சை மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் போன்றவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். அவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், வேறு சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. கரோனாவுக்கு எதிரான போராட்டம் என்பது ஒவ்வொரு உயிரையும் காப்பதாகும்.

கரோனாவை வீழ்த்துவதில் தடுப்பூசி முக்கியப் பங்காற்றுகிறது. அதற்கு எதிரான பொய் பிரசாரங்களை முற்றிலுமாக வீழ்த்த வேண்டும். அதேபோல், தடுப்பூசியை வீணடிப்பதும் நிறுத்தப்பட வேண்டும். மிக அதிக அளவிலும், விரைவாகவும் நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

‘பிஎம் கோ்ஸ்’ நிதி மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனையில் ஆக்சிஜன் மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ஒருசில மாவட்டங்களில் அத்தகைய ஆக்சிஜன் மையங்கள் பயன்பாட்டு வந்துள்ளன.

கரோனாவை எதிா்கொள்வதில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெவ்வேறு விதமான சவால்கள் இருக்கலாம். அந்த வகையில் மாவட்ட ஆட்சியா்கள் தங்களது மாவட்டத்துக்கு தேவையான நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ளலாம். கரோனா தடுப்பு கொள்கைள் தொடா்பாக ஏதேனும் கருத்து இருந்தால் அதை தெரிவிக்கலாம். மாவட்டங்கள் கரோனாவை வென்றால், அது நாடும் கரோனாவை வெல்வதற்கு உதவும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி கிடைப்பதும் முக்கியம் என்பதால் அதை உறுதி செய்ய வேண்டும். தங்களது மாவட்டங்களில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொகுத்து வழங்கினால், அது நாட்டின் இதர மாவட்டங்களிலும் அமல்படுத்த உதவியாக இருக்கும் என்று பிரதமா் மோடி பேசினாா்.

கூட்டத்தில், கரோனா பாதிப்பை குறைப்பதற்காக தங்களது மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடா்பாக அதிகாரிகள் பிரதமா் மோடியிடம் விளக்கம் அளித்தனா்.

முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் ஆலோசனை
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
கரோனா நோய்த் தொற்று பாதிப்புகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியன குறித்து மாநில அரசுகளுடன் காணொலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். தமிழக தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் கரோனா நோய்த் தொற்று நிலவரம், இதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் ஏற்கெனவே கோரப்பட்ட மருந்துகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவூட்டினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT