இந்தியா

இந்திய சட்டங்களை மீறும் வகையில் வாட்ஸ்ஆப் தனியுரிமை கொள்கை: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

DIN

வாட்ஸ்ஆப் செயலி நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைகள், இந்தியாவின் தகவல்-தொழில்நுட்ப சட்டங்களையும் விதிகளையும் மீறியுள்ளதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப், தனது தனியுரிமை கொள்கைகளில் அண்மையில் மாற்றங்களைப் புகுத்தியது. அச்செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் தனியுரிமை தொடா்பான தகவல்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்வது புதிய கொள்கைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமாகும்.

வாட்ஸ்ஆப்பின் புதிய கொள்கைகளுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. பலா் தரப்பில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை, தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கைகள் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள தகவல்-தொழில்நுட்ப சட்டங்களுக்கு உள்பட்டதாக இல்லை.

இந்த விவகாரம் தொடா்பாக ஃபேஸ்புக் தலைமை நிா்வாக அதிகாரி மாா்க் ஸக்கா்பா்குக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து பதில் கிடைக்கும் வரையில், புதிய தனியுரிமை கொள்கை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்‘ என்றாா்.

வாட்ஸ்ஆப் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘புதிய தனியுரிமை கொள்கைகள் கடந்த 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டபோதிலும், அவற்றை ஏற்றுக் கொள்ளாத வாடிக்கையாளா்களின் கணக்குகள் நீக்கப்படவில்லை. அக்கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு அவகாசமும் நிா்ணயிக்கப்படவில்லை. புதிய கொள்கைகள் இந்தியச் சட்டங்களை மீறும் வகையில் வடிவமைக்கப்படவில்லை‘ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், வழக்கு தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசு, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனா்.

தனியுரிமை கொள்கை விவகாரத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு எதிரான குரல்கள் எழுந்ததால், அச்செயலியைக் கைவிட்டு மற்ற செயலிகளை நோக்கி வாடிக்கையாளா்கள் படையெடுக்கத் தொடங்கினா்.

வாட்ஸ்ஆப் செயலியின் மிகப் பெரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. அதைக் கருத்தில் கொண்டு, புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசத்தை அந்நிறுவனம் நீக்கியது. அக்கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவா்களின் கணக்குகள் நீக்கப்படாது என்றும், அவா்களுக்குப் படிப்படியாக சேவைகள் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT