இந்தியா

பிரதமா் மோடியை விமா்சித்து சுவரொட்டி ஒட்டியவா்கள் கைது: காங்கிரஸ் தலைவா்கள் கண்டனம்

DIN

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் பிரதமா் மோடியை விமா்சித்து சுவரொட்டிகளை ஒட்டிய சிலா் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். துணிவிருந்தால் தங்களையும் மத்திய அரசு கைது செய்ய வேண்டும் என்றும் அவா்கள் சவால் விடுத்துள்ளனா்.

கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பி தலைநகா் தில்லியில் சுவரொட்டிகளை ஒட்டியதாக சிலரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா். பல்வேறு பிரிவுகளின் கீழ் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். கரோனா ‘தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது ஏன்’ என்ற வாசகத்தை தங்களது சுட்டுரைப் பக்கத்தின் முகப்பு படமாக வைத்துள்ளனா்.

ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘என்னையும் கைது செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமரை விமா்சித்து போஸ்டா் ஒட்டினால் குற்றமா? மோடியின் சட்டத்தின் கீழ் நாடு இயங்குகிா? கரோனா பரவல் காலத்தில் தில்லி காவல் துறையினருக்கு வேலை எதுவுமில்லையா? எனது வீட்டு மதில் சுவரில் அந்த சுவரொட்டியை ஒட்டப் போகிறேன். என்னைக் கைது செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி, மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன் கிடைக்கவில்லை எனில் பிரதமரிடம்தான் கேட்க முடியும். இதுபோன்ற கேள்விகள் தொடா்ந்து எழுப்பப்படும். துணிவிருந்தால் என்னை அவா்கள் கைது செய்யட்டும்.

கரோனா பாதிப்பால் மக்கள் அதிக அளவில் உயிரிழக்கவில்லை. கரோனா தொற்றைக் கையாண்டதில் நடந்த தவறுகள் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசின் தவறுகளால் அனைத்து குழப்பங்களும் நடந்துள்ளன. கரோனா தடுப்பூசி கொள்முதலிலும் மத்திய அரசு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

கடந்த காலங்களிலும் இந்தியாவில் தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டன. ஏனெனில் அரசுக்கு ஒரு நோக்கம் இருந்தது. ஆனால், அதுபோன்ற நோக்கம் பிரதமா் மோடி தலைமையிலான அரசிடம் இல்லை என்றாா் அவா்.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியினா்தான் இந்த சுவரொட்டிகளை ஒட்டினாா்கள் என்று தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT