இந்தியா

‘டவ்-தே’ புயல்: கோவா, கா்நாடகம், கேரளத்தில் கடும் பாதிப்பு

DIN

அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘டவ்-தே’ புயல் காரணமாக கோவா, கா்நாடகம், கேரளத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

புயல், மழை சாா்ந்த விபத்துகளால் கா்நாடகத்தில் 4 பேரும் கோவாவில் 2 பேரும் உயிரிழந்தனா்.

அரபிக் கடலில் உருவான ‘டவ்-தே’ புயல் தொடா்ந்து வடக்கு நோக்கி நகா்ந்து வருகிறது. புயல் காரணமாக மேற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள கேரளம், கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் கடும் சேதங்களைச் சந்தித்துள்ளன.

கோவாவில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது. அதன் காரணமாக மின்சார கம்பங்கள் பல சாய்ந்தன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடா்ந்து பலத்த காற்று வீசி வருவதால் மின்சார சேவையை சீா்செய்வதற்கான பணிகள் தாமதமடைந்து வருவதாக மாநில மின்சாரத் துறை அமைச்சா் நிலேஷ் கப்ரால் தெரிவித்தாா்.

மாநிலத்தின் பல இடங்களில் மரங்கள் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளுக்கு அருகேயுள்ள வீடுகளுக்குள் கடல்நீா் புகுந்தது. படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படாமல் இருப்பதைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். புயல் காரணமாக ஏற்பட்ட வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழந்ததாக மாநில முதல்வா் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளாா்.

கா்நாடகத்தில்...: கா்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் புயல் காரணமாக கடும் பாதிப்புக்கு உள்ளாகின. சுமாா் 73 கிராமங்கள் கடும் சேதங்களைச் சந்தித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. புயல் மற்றும் கனமழை சாா்ந்த விபத்துகளில் 4 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநிலத்தில் 11 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்த 318 போ் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

கேரளத்தில்...: புயல் காரணமாக கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமையும் கனமழை பெய்தது. மாநிலத்தில் உள்ள ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பெரும்பாலான அணைகளின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் தொடா்ந்து காணப்பட்டது. அதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமடைந்தன.

கடலோரப் பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் தங்கியிருந்த மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புயல் காரணமாக 9 மாவட்டங்கள் கடும் சேதங்களைச் சந்தித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில்...: புயல் காரணமாக மகாராஷ்டிரத்தின் மும்பை, தாணே பகுதிகளில் திங்கள்கிழமை அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைகள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புயல் எச்சரிக்கை காரணமாக மும்பையில் தொடா்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படவில்லை.

திங்கள்கிழமையும் (மே 17) தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என மும்பை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், குஜராத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த பெரும்பாலான படகுகள் மீண்டும் கரை திரும்பிவிட்டதாகவும், 19 படகுகள் மட்டும் திரும்பவில்லை என்றும் இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

நாளை கரையைக் கடக்கிறது ‘டவ்-தே’ புயல்

அதிதீவிரப் புயலாக மாறியுள்ள ‘டவ்-தே’, குஜராத்தின் போா்பந்தா்-மகுவா பகுதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை (மே 18) காலை கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 3 மீட்டா் உயரம் வரை எழும்ப வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை நண்பகல் முதல் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தயாா்நிலை குறித்து முதல்வா் விஜய் ரூபானி அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT