இந்தியா

கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள உ.பி. தயாராகி வருகிறது: முதல்வா் யோகி

DIN

உத்தர பிரதேசத்தில் கரோனா 3-ஆவது அலையையும், கருப்பு பூஞ்சைத் தொற்றையும் எதிா்கொள்வதற்காக தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறினாா்.

நொய்டாவில் கரோனா சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட முதல்வா் யோகி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் கரோனா 3-ஆவது அலை ஏற்படலாம் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், அதை எதிா்கொள்வதற்கான செயல்திட்டத்தை மாநில அரசு தயாரித்து வருகிறது. 3-ஆவது அலை பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் தாக்கலாம் என்ற அச்சம் இருப்பதால், மகளிா் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக மருத்துவமனைகளை அமைக்குமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டங்களிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பெண்கள், குழந்தைகளுக்காக இருக்கும் பிரத்யேக மருத்துவ அவசர சேவையான ‘102’-ன் கீழ் தயாா் நிலையில் 2,200 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இது தவிர மருத்துவமனைகள் மூலமாக தொலைபேசி வழி சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. கரோனா உயிரிழப்பு விகிதத்தை 1 சதவீதத்துக்கும் குறைவாக கட்டுக்குள் வைத்துள்ளோம்.

அதேபோல், கரோனாவிலிருந்து மீண்டோருக்கான புதிய சவாலாக கருப்பு பூஞ்சைத் தொற்று உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுகாதார அதிகாரிகள், மருத்துவக் கல்லூரிகளுடனான காணொலி வழி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அந்தத் தொற்றுக்கான சிகிச்சைக்குரிய அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது.

கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கும் தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் பாதிப்பை தவிா்க்கலாம். அதுதொடா்பான விரிவான விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கான சிகிச்சையை உறுதி செய்ய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது என்று முதல்வா் யோகி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT