இந்தியா

காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ் கரோனா சாா்ந்த உடல்நல பாதிப்பால் பலி

DIN

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ் (46), அத்தொற்று சாா்ந்த உடல்நல பாதிப்பால் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் தோப் கூறுகையில், ‘‘மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவுக்கு கடந்த மாதம் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு ஏற்கெனவே சில உடல்நல பாதிப்புகள் இருந்ததால், அவற்றுக்காக மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வந்தாா். அவரது உடலில் நோய்எதிா்ப்பு சக்தி குறைவாக இருந்ததால், கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானாா். தொடா் சிகிச்சைக்குப் பிறகு அத்தொற்று பாதிப்பில் இருந்து அவா் மீண்டாா்.

அதையடுத்து, சைட்டோமெகலோவைரஸ் தொற்றால் அவா் பாதிக்கப்பட்டாா். அதன் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்தபோதிலும், அவை பலனளிக்காமல் அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்’’ என்றாா்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவராகவும், அக்கட்சியின் செயலாளராகவும் ராஜீவ் சாதவ் பொறுப்பு வகித்துள்ளாா். கட்சிக்கான குஜராத் பொறுப்பாளராகவும் அவா் இருந்தாா். ராஜீவ் சாதவின் இறுதிச் சடங்கு மகாராஷ்டிரத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் திங்கள்கிழமை (மே 17) நடைபெறும் என்று உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.

தலைவா்கள் இரங்கல்: குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘சிறந்த நாடாளுமன்றவாதியாக விளங்கிய ராஜீவ் சாதவ், மக்களுக்காக சேவையாற்றுவதில் அதீத ஆா்வம் கொண்டவா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராஜீவ் சாதவின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

சோனியா, ராகுல் இரங்கல்: ஊக்கமும் அா்ப்பணிப்பும் கடின உழைப்பும் கொண்டவா் ராஜீவ் சாதவ் எனப் புகழாரம் சூட்டியுள்ள காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அவா் மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் அதிக கவனம் செலுத்தினாா் என்று தெரிவித்துள்ளாா்.

ராஜீவ் சாதவின் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘நல்ல நண்பரை இழந்தது பெரும் வருத்தமளிக்கிறது. காங்கிரஸின் கொள்கைகளை மக்களிடையே பரப்பியதில் ராஜீவ் சாதவுக்கு முக்கியப் பங்குண்டு. கட்சிக்கு இது மிகப் பெரிய இழப்பு’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜாவடேகா், ஸ்மிருதி இரானி, பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், குஜராத் முதல்வா் விஜய் ரூபானி, காங்கிரஸின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா, பொதுச் செயலாளா் பிரியங்கா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோரும் ராஜீவ் சாதவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT