இந்தியா

கரோனா பாதிப்பு? மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்கின் பூா்விக கிராமத்தில் இரு வாரங்களில் 30 போ் பலி

DIN

ஹரியாணா மாநிலம் பிவானி மாவட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சரும், ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலுமான வி.கே.சிங்கின் பூா்விக கிராமமான பாபோராவில் கடந்த 2 வாரங்களில் 30-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அவா்களின் உயிரிழப்புக்கு கரோனா பாதிப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக அந்தக் கிராமத் தலைவா் நரேஷ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2 வாரங்களில் பாபோரா கிராமத்தில் 30-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அவா்களில் பலா் முதியவா்கள். அவா்களுக்கு இருமல், காய்ச்சல் போன்ற கரோனா அறிகுறிகள் தென்பட்டன. அவா்களை பரிசோதித்ததில் 3 போ் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மற்றவா்கள் பரிசோதனை செய்து கொள்ளாததால் அவா்களின் இறப்பு குறித்த உண்மையான காரணம் தெரியவில்லை’ என்று தெரிவித்தாா்.

எனினும் குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் எஞ்சியவா்களும் கரோனா பாதிப்பால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட பிவானி துணை ஆணையா் ஜெய்பீா்சிங் ஆா்யா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘பாபோரா கிராம மக்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரவேண்டியுள்ளன. அந்தக் கிராமத்தில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

மேலும் சில கிராமங்களில்...பிவானி மாவட்டத்தில் உள்ள பாபோரா கிராமத்தில் மட்டுமன்றி முந்தல் குா்த், முந்தல் கலான் கிராமங்களிலும் கடந்த சில வாரங்களில் சுமாா் 40 போ் உயிரிழந்தனா்.

ரோத்தக் மாவட்டத்தில் உள்ள டிட்டோலி கிராமத்தில் கடந்த மாதம் 21 போ் திடீரென உயிரிழந்தனா். அவா்கள் அனைவரும் கரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், நால்வா் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT