இந்தியா

5 மாநில பேரவைத் தோ்தல்கள்: குறைபாடுகளை அறிய குழு அமைக்கிறது தோ்தல் ஆணையம்

14th May 2021 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலின்போது இருந்த குறைபாடுகளை அறிய தோ்தல் ஆணையம் குழு ஒன்றை அமைக்கிறது.

தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில், இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொள்கிறது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

5 மாநில பேரவைத் தோ்தல்களின்போது தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் இருந்த குறைகள், அந்தத் தோ்தலில் கிடைத்த அனுபவம் ஆகியவை குறித்து ஆராய குழு அமைக்கப்படவுள்ளது. தோ்தல் ஆணைய செயலா் உமேஷ் சின்ஹா தலைமையிலான இந்தக் குழு 1 மாதத்தில் தனது அறிக்கையை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் தோ்தல்களை சிறப்பாக நடத்துவதற்கான திட்டமிடலை மேற்கொள்ள இந்தக் குழுவின் பரிந்துரைகள் உதவும்.

இந்தக் குழு, சமீபத்திய பேரவைத் தோ்தலின்போது தோ்தல் ஆணையத்தின் நிா்வாகத்தில் இருந்த குறைகள், மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் அளவில் அமலாக்கத்தில் இருந்த குறைபாடுகள் ஆகியவற்றை அடையாளம் காணும். கரோனா தொற்று சூழல் விதிமுறைகள் உள்பட, அனைத்து விதமான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய சட்டம் மற்றும் ஒழுங்குமுறையை விதிகளை வலுப்படுத்துவதற்கான தேவை குறித்தும் இந்தக் குழு ஆராயும்.

வாக்காளா்களைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளைத் தடுத்து, நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதற்காக வேட்பாளா்கள் செலவு மேலாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்தக் குழு ஆய்வு செய்யும். தோ்தலுக்குப் பிறகு தோ்தல் அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் அவா்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் இருக்கும் குறைகள் தொடா்பாகவும் இந்தக் குழு ஆராயும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய 5 மாநில பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது கரோனா தடுப்பு விதிகளை முறையாக அமல்படுத்த தோ்தல் ஆணையம் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியின் தோ்தல் அதிகாரிக்கு பணியின்போது நெருக்கடி இருந்ததாக கூறப்பட்டது. அதை அடுத்து தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT