இந்தியா

கரோனாவின் உண்மை நிலையை பிரதமர் உணர வேண்டும்

12th May 2021 03:43 AM

ADVERTISEMENT

நாட்டின் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதுபற்றிய உண்மையை நிலையை பிரதமர் உணர்ந்து செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
 நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுதல், பிரதமர், துணை குடியரசுத் தலைவருக்கு மாளிகை கட்டுதல் உள்ளிட்ட செயல் திட்டமான "சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கான நிதியை நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
 எண்ணில் அடங்காத உடல்கள் ஆற்றில் செல்கின்றன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் மைல் கணக்கில் வரிசைகளில் நிற்கின்றனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் உண்மை நிலைமையை அறியாததுபோல செயல்படுகிறார். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் மீது மட்டுமே அவரது பார்வை இருக்கிறது.
 நாட்டின் கரோனா தாக்கத்துக்கு எதிரான போராட்டத்தை பலப்படுத்த காங்கிரஸ் கட்சி "உயிர்களைக் காப்பாற்றப் பேசுவோம்' என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. நாட்டு மக்கள் அதில் இணைந்திட வேண்டும். இந்தத் துன்பமான நேரத்தில் தேவைப்படுவோருக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 மேலும் அவர் தனது சுட்டுரையில் சில நிமிடம் ஓடும் ஒரு விடியோ பதிவையும் இணைத்துள்ளார். அந்த விடியோ பதிவில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், சுவாசக் கருவி பற்றாக்குறை, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகள் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு, மக்கள் அவற்றைப் பெற போராடுவது போன்றவை அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT