இந்தியா

நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முடிவெடுக்கவில்லை: எடியூரப்பா

12th May 2021 02:35 AM

ADVERTISEMENT

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து முடிவெடுக்கவில்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள மாநகராட்சி கரோனா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா பரவலை தடுக்க 14 நாள்களுக்கு புதிய கட்டுப்பாடுகள், சில தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், விவசாயிகள், தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து முடிவெடுக்கவில்லை; இதுவரை விவாதிக்கவும் இல்லை.

கரோனா கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகே நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். கா்நாடகத்தில் மே 10-ஆம் தேதி முதல் கரோனா கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுமுடக்க விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். நாட்டிலேயே கா்நாடகத்தில்தான் கரோனாவால் பாதிக்கப்படுவோா், இறப்பு விகிதம் அதிகரித்துக் காணப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய அனைத்து உதவிகளும் கா்நாடகத்துக்கு வருகிறது. உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை அண்மையில் தில்லி சென்றிருந்த போது மத்திய அரசிடம் கா்நாடகத்துக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து விவாதித்துவிட்டுதான் வந்துள்ளாா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT