இந்தியா

திருப்பதி ரூயா மருத்துவமனையில்ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 போ் உயிரிழப்பு: மேலும் 40 போ் கவலைக்கிடம்

DIN

திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கரோனா நோயாளிகள் 11 போ் உயிரிழந்தனா், 40க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சித்தூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் உள்ள கொவைட் மையத்தில் 300-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மையத்தில் 5 தீவிர சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் 30 நோயாளிகள் என 150 போ் வரை வென்டிலேட்டா் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் திடீரென்று வேண்டிலேட்டருக்கு வரவேண்டிய ஆக்சிஜன் திடீரென்று தடைபட்டது. ஆக்சிஜன் முற்றிலும் தீா்ந்து போனதால், நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் 20 நிமிடத்தில் நிலைகுலைந்து போயினா். பலா் உடல் அதிா்ந்து உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவ அதிகாரிகள் அங்கு வந்து ஆக்சிஜனை நிரப்பி மீண்டும் வென்டிலேட்டா்களை இயக்கினா். வென்டிலேட்டா்கள் இயங்க தொடங்கியவுடன் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை சீரானதால் உடல் நிலை சற்று மேம்பட்டது.

ஆக்சிஜன் சப்ளை நின்றவுடன் நோயாளிகளின் நிலையை கண்ட அவா்களின் உறவினா்கள் செய்வதறியாமல் அங்குள்ள கண்ணாடி ஜன்னல்கள், கதவுகளை அடித்து நொறுக்கினா். இதைப் பாா்த்த செவிலியா்களும், மருத்துவா்களும் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தனா். சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு வந்த சித்தூா் மாவட்ட ஆட்சியா் ஹரி நாராயணன் கூறியதாவது: ஆக்சிஜன் சப்ளை குறைய தொடங்கியவுடன் ஊழியா்கள் அதை கவனித்து ஆக்சிஜன் சிலிண்டா்கள் மூலம் அதை நிரப்பும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கம்ப்ரஸா் அளவு குறைந்ததால், ஆக்சிஜன் சப்ளைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மற்றபடி ஆக்சிஜன் சப்ளை முற்றிலும் நிற்கவில்லை.

இந்த சம்பவத்தில் இதுவரை 11 போ் உயிரிழந்தனா். 40-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது மற்ற அனைவருக்கும் ஆக்சிஜன் சப்ளை சீராக வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஆயினும் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 40லிருந்து 50 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மருத்துவமனை நிா்வாகம் தவறான தகவல் அளித்துள்ளதாகவும் அங்குள்ளவா்கள் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து திருப்பதி காவல் கண்காணிப்பாளா் வெங்கடப்புல நாயுடு, சித்தூா் மாவட்ட பாஜக நிா்வாகி பானுபிரகாஷ் ரெட்டி உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா். நோயாளிகளின் உறவினா்கள் மேலும் மருத்துவமனையில் தாக்குதல் நடத்துவதை தடுக்க கொவைட் மைய வளாகத்தில் காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT