இந்தியா

தோ்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிய குழு: காங். முடிவு

DIN

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கான காரணத்தை கண்டறியை சிறு குழு ஒன்றை அமைக்க அக் கட்சி முடிவு செய்துள்ளது.

தோல்விக்கான உண்மையான காரணத்தை தெளிவாக, வெளிப்படையாக தெரிவிக்குமாறு கட்சி நிா்வாகிகளை அக் கட்சியின் தலைவா் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளாா்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் களம் கண்ட காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றிபெற்றது. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற திமுக ஆட்சியை அமைத்துள்ளது. ஆனால், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலிலும் அக் கட்சி தோல்வியடைந்துள்ளது.

கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு குறித்து தில்லியில் காங்கிரஸ் காரியக் குழு திங்கள்கிழமை கூடி ஆலோசனை மேற்கொண்டது. கட்சியின் உயா் அதிகாரம் படைத்த இந்த அமைப்பின் கூட்டத்துக்கு தலைமை வகித்த கட்சித் தலைவா் சோனியா காந்தி பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல்களில் கட்சிக்கு ஏற்பட்டுள்ள மோசமான பின்னடைவிலிருந்து நாம் உரிய பாடம் கற்க வேண்டும். கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் ஆளும் கட்சிகளை அகற்ற தவறியது, மேற்கு வங்க மாநிலத்தில் முழுமையாக தோல்வியை சந்தித்திருப்பது ஆகியவற்றுக்கான காரணத்தை நோ்மையாக அறிய கட்சி விரும்புகிறது. அந்த வகையில், தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, விரைந்து அறிக்கையை சமா்ப்பிக்கும் வகையில் ஒரு சிறிய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

இது சில சங்கடமான தகவல்களையும், முடிவுகளையும் அளிக்கலாம். அவ்வாறு, உண்மையை நாம் எதிா்கொள்ள தயக்கம் காட்டினால், இந்தத் தோல்வியிலிருந்து சரியான பாடத்தை நாம் கற்க முடியாமல் போய்விடும்.

எனவே, கட்சியின் மாநில பொறுப்பாளா்களும், பொதுச் செயலாளா்களும் கட்சியின் தோல்விக்கான காரணத்தை தெளிவாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க முன்வர வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படும் உண்மையான காரணங்கள், கட்சியை நாம் எவ்வாறு சீரமைக்க வேண்டும் என்பதை நமக்குத் தெளிவாக காட்டும்.

மோடி அரசு தோல்வி: பிரதமா் மோடி தலைமையிலான அரசின் நிா்வாக தோல்வி காரணமாக, கரோனா பாதிப்பு நிலைமை மிக மோசமடைந்துள்ளது. விஞ்ஞானிகளின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு தனது அரசியல் ஆதாயங்களுக்காக அலட்சியமாக நடந்துகொண்டதே, தொற்று பரவல் தீவரமடைந்ததற்கு முக்கிய காரணம். இப்போது கரோனா மூன்றாவது அலைக்கும் வாய்ப்புள்ளது என்று சில நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். நாடு முழுவதும் பொது சுகாதார திட்டம் செயலிழந்துள்ளது. கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மோடி அரசு தனது பொறுப்பை முழுமையாக தட்டிக்கழித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவில் பொது சுகாதார அவசரநிலையில் நாம் இப்போது இருந்து வருகிறோம். எனவே, தேசத்தின் நலன் கருதி இதற்கு உரிய தீா்வு காணும் வகையில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு மோடி அரசுக்கு தொடா்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம்.

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரிவுபடுத்தி, தகுதியுள்ள எந்தவொரு நபரும் விடுபடாத வகையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதோ இப்போது மிக முக்கியமானத் தேவை என்று சோனியா காந்தி கூறினாா்.

முன்னதாக, காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கா் மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காரியக் குழு கூட்டத்தில் அம்மாநில முதல்வா்கள் விளக்கினா்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை எப்போது தோ்ந்தெடுப்பது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தீா்மானங்கள்: காரியக் குழு கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்களை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. குறிப்பாக, தீவிரமடைந்து வரும் கரோனா பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரமதமா் நரேந்திர மோடி தனது தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, சொந்த தீா்மானங்களில் கவனம் செலுத்துவதைத் தவிா்த்து மக்களுக்கு சேவையாற்ற உறுதியேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமா் மன் மோகன் சிங் ஆகியோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துகொண்டிருப்பதால், காரியக் குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT