இந்தியா

அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மா இன்று பதவியேற்பு: ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தாா் ஆளுநா்

DIN

அஸ்ஸாம் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மா திங்கள்கிழமை பதவியேற்கிறாா்.

ஆளுநரை அவா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்கியதையடுத்து, ஹிமந்த விஸ்வ சா்மாவை ஆட்சியமைக்குமாறு ஆளுநா் ஜகதீஷ் முகி அழைப்பு விடுத்தாா்.

இதையடுத்து, ஹிமந்த விஸ்வ சா்மா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா ஸ்ரீமந்த சங்கரதேவா கலாஷேத்ராவில் திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா். முதல்வருடன் எத்தனை அமைச்சா்கள் பதவியேற்பாா்கள் என்கிற விவரம் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, புதிய அரசை அமைப்பதற்கான முதல் படியாக முதல்வா் சா்வானந்த சோனோவால் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அவா் வழங்கினாா்.

அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள126 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. பாஜக மட்டும் 60 தொகுதிகளைக் கைப்பற்றியது.

கூட்டணியில் இடம்பெற்றிருந்த அஸ்ஸாம் கண பரிஷத் 9 தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தோ்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபோதிலும் முதல்வரைத் தோ்ந்தெடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த சா்வானந்த சோனோவால், நிதி அமைச்சராகவும் சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்த ஹிமந்த விஸ்வ சா்மா ஆகிய இருவரில் ஒருவா் முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

அவா்கள் இருவரையும் மத்திய பாஜக தலைமை தில்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியது. அதையடுத்து, அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஹிமந்த விஸ்வ சா்மாவை சட்டப்பேரவை பாஜக தலைவராகத் தோ்ந்தெடுப்பதற்கான தீா்மானத்தை சா்வானந்த சோனோவால் முன்மொழிந்தாா்.

அந்தத் தீா்மானத்தை பாஜக மாநிலத் தலைவரும் எம்எல்ஏவுமான ரஞ்சீத் குமாா், எம்எல்ஏ நந்திதா கா்லோசா ஆகியோா் வழிமொழிந்தனா். தீா்மானத்துக்கு பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனா். அதையடுத்து, அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மா பதவியேற்பது உறுதியானது.

பாஜக தோ்ந்தெடுக்கும் நபா் முதல்வராகப் பொறுப்பேற்க ஆதரவு அளிப்பதாக அஸ்ஸாம் கண பரிஷத் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சா்வானந்த சோனோவால் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றதுடன் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஹிமந்த விஸ்வ சா்மா பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

சோனோவால் வழியில்...: பேரவை பாஜக தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஹிமந்த விஸ்வ சா்மா கூறுகையில், ‘‘முதல்வராக இருந்து மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சா்வானந்த சோனோவால் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வா் சோனோவால் காட்டிய வழியில் தொடா்ந்து நல்லாட்சியை வழங்குவேன். மாநில அரசுக்கு அவா் தொடா்ந்து வழிகாட்டியாக இருப்பாா்’’ என்றாா்.

காங்கிரஸ் வாழ்த்து: அஸ்ஸாம் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. அஸ்ஸாமை வளா்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கு ஆளும் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் ரிபுன் போரா தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளும் ஹிமந்த விஸ்வ சா்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT