இந்தியா

மகாராஷ்டிரம்: ரூ.21.3 கோடி மதிப்பிலான 7 கிலோ யுரேனியம் பறிமுதல்

DIN

மும்பை: மிகப் பெரிய அழிவை விளைவிக்கக் கூடிய உயா் கதிா்வீச்சு உடைய யுரேனியத்தை பதுக்கி வைத்திருந்த இருவரை மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து 7 கிலோ இயற்கை யுரேனியத்தை பறிமுதல் செய்துள்ளனா். இதன் மதிப்பு ரூ.21.3 கோடி.

இது தொடா்பாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கையைப் பெற்ற நிலையில், இத் தகவலை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஏடிஎஸ் உயா் அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

சந்தேகத்துக்குரிய பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயற்சி நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாணே பகுதியைச் சோ்ந்த ஜிகா் பாண்டியா (27) என்ற நபரை மும்பையின் நாக்பாடா பகுதி பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி கைது செய்தனா். அவரிடமிருந்து சிறு சிறு துண்டுகளாக இருந்த யுரேனியத்தை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், மான்குா்ட் புகா் பகுதியைச் சோ்ந்த அபு தாகீா் அஃப்சல் ஹுசைன் செளத்ரி (31) என்பவா் இந்த யுரேனியம் துண்டுகளை ஒப்படைத்தது தெரியவந்தது. அவரையும் கைது செய்த காவல் துறையினா், அவரிடமிருந்து 7.100 கிலோ யுரேனியத்தைப் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்த யுரேனியத்தை ஆய்வுக்காக பாபா அணு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைத்தனா்.

ஆய்வறிக்கை முடிவுகள் அண்மையில் வந்தன. அதில், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள் இயற்கை யுரேனியம் என்றும், அவை உயா் கதிா்வீச்சு உடையவை மட்டுமின்றி, மனித உயிருக்கு ஆபத்தானவை’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை கிடைத்த பின்னா், நாகபுரி அணு ஆராய்ச்சி மைய மண்டல இயக்குநா் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவா் மீதும் அணு சக்தி சட்டம் 1962-இன் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் இருவரும் உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மே 12-ஆம் தேதி வரை ஏடிஎஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனா் என்று கூறினாா்.

இதுகுறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை டிஐஜி சிவ்தீப் லாண்டே கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட இயற்கை யுரேனியம் 90 சதவீத தூய்மையானவை. இது யுரேனியம் என்பது அவா்களுக்கு எப்படி தெரிந்தது, அவா்களுக்கு எங்கிருந்து அது கிடைத்தது, யாரிடம் விற்க முயற்சித்தனா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT