இந்தியா

கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: உச்சநீதிமன்றம்

7th May 2021 04:57 AM

ADVERTISEMENT

 


புது தில்லி: கரோனா மூன்றாவது அலை கடும் விளைவுகளை, குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.
மேலும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தில்லிக்கு விநியோகிக்கப்படும் 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் அளவை குறைக்கக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கரோனா பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தில்லிக்கு மருத்துவ ஆக்சிஜன் விநியோகிப்பது தொடர்பான வழக்கில், "மத்திய அரசு நாள் ஒன்றுக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தில்லிக்கு வழங்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், "நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத மத்திய அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி, அதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதோடு, தில்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்வது தொடர்பான விவரங்களை வியாழக்கிழமை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தில்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகுல் மெஹ்ரா, "நீதிமன்றம் உத்தரவிட்ட அளவில் தில்லிக்கு ஆக்சிஜனை மத்திய அரசு விநியோகம் செய்யவில்லை' என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா "நீதிமன்றம் உத்தரவிட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் ஆக்சிஜன் தில்லிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மாநில அரசு அதிகாரத்தின் கீழ் வருகிறது. எனவே, ஆக்சிஜன் எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும்; எவ்வளவு விநியோகிக்க வேண்டும் என்பதை மாநில அரசுதான் முடிவு செய்யவேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் மற்றும் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசும், தில்லி அரசும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக்கொண்டு சண்டையிடுவதற்கான தளமாக உச்சநீதிமன்றத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதையே உச்சநீதிமன்றம் விரும்புகிறது.
தில்லி உள்பட நாட்டின் பல பகுதிகளில் பெரிய மருத்துவமனைகளில்கூட ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிய வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருக்கும் மக்களில் சிலருக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர் என்பதை மறுத்துவிட முடியாது. எனவே, மத்திய அரசின் ஆக்சிஜன் விநியோக நடைமுறை மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம். தேவையைக் காட்டிலும் கூடுதல் ஆக்சிஜன் கையிருப்பு இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்க வாய்ப்புள்ளது என்றும், அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்திருக்கின்றனர்.
எனவே, கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT