இந்தியா

"மத்திய அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் நடைமுறை மே இறுதி வரை தொடரும்'

5th May 2021 04:21 AM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் வராததால், மத்திய அரசின் துறைகளைச் சார்ந்த அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றும் நடைமுறை இந்த மாத இறுதி வரை தொடரும் என்று மத்திய பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவி வருகிறது. அதையடுத்து, கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் துறைகளைச் சார்ந்த அலுவலகங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய பணியாளர் நல அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்டது. அக்கட்டுப்பாடுகள் அனைத்தும் மே மாத இறுதி வரை அமலில் இருக்கும் என்று அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே நேரில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும். அதேவேளையில், துணைச் செயலருக்கு நிகரான பதவியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் நாள்தோறும் அலுவலகத்துக்கு வர வேண்டியது கட்டாயமாகும்.
அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பணியாளர்கள் கூடுவதைத் தவிர்க்கும்பொருட்டு பணி நேரம் 9 மணி முதல் 5.30 மணி வரை, 9.30 மணி முதல் 6 மணி வரை, 10 மணி முதல் 6.30 மணி வரை என 3 கட்டங்களாக மாற்றப்பட்டிருந்தது. அந்த நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருக்கும். 
அலுவலகத்துக்கு வரும் அதிகாரிகள் அனைவரும் கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். 
மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் அலுவலகத்துக்கு நேரில் வருவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT