இந்தியா

மம்தா வெற்றியா? தோல்வியா? நீடிக்கும் குழப்பம்

2nd May 2021 07:14 PM

ADVERTISEMENT

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நந்திகிராம் தொகுதியில் வெற்றி அறிவிப்பில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்ற சந்தேகம் தானாவே எழுகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தனக்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டுமாறு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்திருந்தார். பாஜக சவாலை ஏற்று தனது சொந்த தொகுதியில் போட்டியிடாமல், மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார் திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி.  அவரை எதிர்த்து பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் சுவேந்து அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை முதலே பின்னடைவை சந்தித்த மம்தா, பிற்பகலுக்கு பிறகு முன்னிலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மாலை 5 மணியளவில் சுவேந்து அதிகாரிக்கு எதிராக போட்டியிட்ட மம்தா பானர்ஜி, 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக மாலை 5 மணிக்கு ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது.

ஆனால், பல்வேறு ஊடகங்களிலும், மம்தா பானர்ஜி சில சுற்றுகளுக்குப் பின் 6 வாக்கு வித்தியாத்தில் மீண்டும் பின்னடைவை சந்தித்ததாகப் பதிவிடப்பட்டது.

இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பதை உறுதி செய்யும் வகையில் மம்தா பானர்ஜி வெற்றியுரை ஆற்றினார்.

அதில், நந்திகிராம் பற்றி கவலைப்பட வேண்டாம், ஒரு பெரும் போரில் நாம் எதையாவது தியாகம் செய்துதான் ஆக வேண்டும். நான் நந்திகிராமுக்காகப் போராடினேன். ஒரு இயக்கத்துக்கு எதிராக எனது போர் அமைந்திருந்தது. பரவாயில்லை. நந்திகிராம் மக்கள் என்ன தீர்ப்பளித்தாலும் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். 

இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மகத்தான வெற்றியளித்த மேற்கு வங்க மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உடனடியாக கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக பணியாற்ற வேண்டும். கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மிகச் சிறிய அளவிலான பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இதில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்திருக்கலாம் என்பது போன்று பேச்சு அமைந்திருந்தது. ஆனால் இது பற்றி எந்த செய்தியும் 7 மணி வரை உறுதி செய்யப்படவில்லை.

 

அதே வேளையில் மேற்கு வங்க மாநில பாஜக பொறுப்பாளர் அமித் மால்வியா, நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி 1,622 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பினை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதோடு குழப்பம் தீர்ந்துவிடவில்லை.. 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்திலோ இன்னமும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

எனவே, மம்தா பானர்ஜி வெற்றி பெற்றாரா? அல்லது தோல்வியைத் தழுவினாரா என்பதில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT