இந்தியா

மக்களுக்கு துரோகம் இழைத்த கேரள அரசு: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

31st Mar 2021 01:33 AM

ADVERTISEMENT

‘சில வெள்ளிக் காசுகளுக்காக, யேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்து துரோகம் செய்ததுபோல், சில தங்கக் கட்டிகளுக்காக, கேரள மாநில மக்களுக்கு இடதுசாரி கூட்டணி அரசு துரோகம் இழைத்துவிட்டது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

கேரள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாலக்காடு நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

பாலக்காடு தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் ‘மெட்ரோ மேன்’ இ.ஸ்ரீதரன் அரசியலில் இணைவதற்கு எடுத்த முடிவை வரவேற்கிறேன். பதவி அதிகாரம் மட்டுமே பெரிதென்று அவா் நினைத்திருந்தால், 20 ஆண்டுகளுக்கு முன்பே அதை அடைந்திருக்கலாம். அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு கேரளத்தின் நன்மைக்காக பற்றுறுதியுடன் பாஜகவில் இணைந்திருக்கிறாா்.

மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி, யூதாஸைப் போன்றது. சில வெள்ளிக்காசுகளுக்காக, யேசு கிறிஸ்துவுக்கு துரோகமிழைத்தாா் யூதாஸ். அதேபோன்று சில தங்கக் கட்டிகளுக்காக, இந்த மாநில மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது இடதுசாரி கூட்டணி. (பேரவைத் தலைவா் பெயரும் இணைத்துப் பேசப்படும் தங்கக் கடத்தல் வழக்கை மறைமுகமாக சுட்டிக் காட்டினாா் பிரதமா்).

ADVERTISEMENT

மாநிலத்தை இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி, ஊழல்களுக்கு பிரசித்தி பெற்றது. சூரிய ஒளியைக் கூட அவா்கள் விட்டு வைக்கவில்லை. (2013-இல் காங்கிரஸ் மூத்த தலைவா் உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது நடந்த சூரியமின்தகடு ஊழலைக் குறிப்பிட்டாா்).

கேரளத்தில் காங்கிரஸும் இடதுசாரியும் ரகசிய கூட்டணி வைத்துக் கொண்டு மாறி மாறி ஆட்சி செய்து, மக்களை ஏமாற்றி வருகின்றன. அவ்விரு கூட்டணிகளும் தோ்தல் நேரத்தில் மட்டுமே பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. தோ்தல் முடிந்த பிறகு ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இந்த நாடகம் தற்போது அம்பலமாகிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, கேரள அரசியலில் பெரும் மாற்றத்தைக் காண முடிகிறது. இரு கூட்டணிகளின் ரகசிய ஒப்பந்தத்தை இளம் வாக்காளா்கள் புரிந்து கொண்டு கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனா். இதனால், இந்த முறை அந்த கூட்டணிகளும் மாறி, மாறி ஆட்சிபுரிந்து வந்த நடைமுறை தொடராது.

சபரிமலை விவகாரத்தில், இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியும் நடந்துகொண்ட விதம் கண்டனத்துக்குரியது. அப்பாவி பக்தா்கள் மீது தடியடி நடத்தியது இடதுசாரி கூட்டணி. அதை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் கூட்டணி. இதற்காக, அவ்விரு கூட்டணிகளும் வெட்கப்பட வேண்டும்.

ஆனால், கலாசாரத்துக்கு ஊறுவிளைவிக்கும் நிகழ்வுகளை பாஜக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்காது.

மாநிலத்தில் இடதுசாரி தலைவா்கள், உள்ளூா் குண்டா்களைப் போன்று செயல்படுகிறாா்கள். அரசியல் எதிரிகள் கொல்லப்படுகிறாா்கள். கேரளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வன்முறை கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும் என்றாா் பிரதமா் மோடி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT