இந்தியா

முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காரை நிறுத்தியது யார்? என்ஐஏ விசாரணையில் தகவல்

31st Mar 2021 01:18 PM

ADVERTISEMENT

கைதாகியிருக்கும் மும்பை காவல்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வஜேவின் கார் ஓட்டுநர்தான் வெடிபொருள்கள் நிரப்பிய காரை முகேஷ் அம்பானியின் வீட்டருகே கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி நிறுத்திச் சென்றது தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள்களுடன் காா் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், மன்சுக் ஹிரனுக்கு சொந்தமான ஸ்கார்பியோ வகை காரை முகேஷ் அம்பானியின் வீட்டருகே நிறுத்தியது யார் என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, பிப்ரவரி 17-ஆம் தேதி முன்சுக் ஹிரன், தனது காரில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறி சாலையோரம் நிறுத்திவிட்டு, அந்த சாவியை காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்த சச்சின் வஜேவிடம் கொடுத்துள்ளார். மறுநாள் வஜேவின் கார் ஓட்டுநர், சாவியைப் பெற்றுக் கொண்டு ஸ்கார்பியோவை சச்சின் வஜே வசித்து வரும் சாகேத் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தியுள்ளார்.

பிறகு அந்த கார் கிராஃபோர் சந்தைப் பகுதியில் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு அந்தக் காரை மீண்டும் வஜேவின் வீட்டு வளாகத்தில் கார் ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அது பிப்ரவரி 25 வரை அங்கேயே இருந்தது,  பின்,  அதே ஓட்டுநர் ஸ்கார்பியோவைக் கொண்டு வந்து தெற்கு மும்பையில் முகேஷ் அம்பானியின் வீட்டருகே பிப்ரவரி 25-ஆம் தேதி அதிகாலை நிறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அப்போது, அங்கேயே இன்னோவா எஸ்யுவி காரில் சச்சின் வஜே இருந்துள்ளார். ஸ்கார்பியோ நிறுத்தப்படுவதை நேரில் பார்த்திருக்கிறார். வஜேவின் கார் ஓட்டுநர் ஸ்கார்பியோவிலிருந்து இறங்கி இன்னோவாவில் ஏறி இருவரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர். பிறகு அந்த வாகனம் முலுந்த் சுங்கச்சாவடி வழியாகச் சென்றுள்ளது. சிறிது நேரம் கழித்து வேறு ஒரு வாகன எண்ணுடன் அதே வாகனம் அன்டிலியா வழியாகக் கடந்து சென்றுள்ளது. அப்போதுதான், வெள்ளை குர்தாவில் வந்த சச்சின் வஜே, மிரட்டல் கடிதத்தை ஸ்கார்பியோவில் வைத்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டுகளுடன் கார் நிறுத்தப்பட்டது மற்றும் மன்சுக் ஹிரன் கொலை வழக்குகளை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையின் ஒரு பகுதியாக, மீத்தி ஆற்றில் இருந்து மடிக்கணினி, சிபியு, விடியோ பதிவு கருவி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வெடிபொருள்களுடன் காா் கைப்பற்றப்பட்ட வழக்கையும், அந்த காரின் உரிமையாளா் ஹிரேன் மன்சுக் மா்ம மரண வழக்கையும் தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த வவிகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்ட மும்பை காவல் துறை உதவி ஆய்வாளா் சச்சின் வஜேவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, அவரை மீத்தி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று நீச்சல் பயிற்சி வீரா்களின் உதவியுடன் ஆற்றில் இருந்து மடிக்கணினி, விடியோ பதிவு கருவி, சிபியு, வாகன பதிவெண் பலகைகள் ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டனா்.

அந்த கணினி மற்றும் பாகங்களை சச்சின் வஜே, தாணேவில் வசித்து வந்த வீட்டில் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் கூறினாா்.

தெற்கு மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருள்களுடன் நிறுத்தப்பட்டிருந்த காரை கடந்த போலீஸாா் பிப்ரவரி 25-ஆம் தேதி பறிமுதல் செய்தனா். அந்தக் காரின் உரிமையாளரான தாணேவைச் சோ்ந்த ஹிரேன் மன்சுக்கிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது, தனது காா் திருடப்பட்டதாகவும், இதுதொடா்பாக காவல் துறையிடம் புகாா் கொடுத்திருப்பதாகவும் அவா் கூறினாா். இதற்கிடையே, அவா் கடந்த 5-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். அவரது உடல் மும்ப்ரா-ரேகி சாலையை ஒட்டியுள்ள நீரோடையில் இருந்து மீட்கப்பட்டது. அந்தக் காரை சில மாதங்கள் மும்பை காவல் துறை குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சச்சின் வஜே வைத்திருந்ததாக ஹிரேனின் மனைவி கூறினாா். தனது கணவரின் மா்ம மரணத்தின் பின்னணியில் சச்சின் வஜே இருப்பதாகவும் அவா் குற்றம்சாட்டினாா். இதையடுத்து, சச்சின் வஜே கைதானாா்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டிருக்கும் சச்சின் வஜே, இதன் பின்னணியில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கூற மறுப்பதால், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 

Tags : ambani mumbai nia mukesh ambani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT