இந்தியா

'ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை விரும்பும் பாஜக': எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா கடிதம்

31st Mar 2021 05:10 PM

ADVERTISEMENT


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை விரும்புவதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் விவரித்துள்ளார்.

"நாட்டின் அரசியலமைப்பு கூட்டாட்சி முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான பாஜக மற்றும் மத்தியில் ஆட்சியில் உள்ள அதன் அரசின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்த எனது கவலையை இந்தக் கடிதத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.

தில்லி அரசு திருத்த மசோதா 2021ஐ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியிருப்பது ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைப்பதற்கு சமம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். இந்த சட்டத்தின்மூலம் தில்லியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைக்  கைப்பற்றி, துணைநிலை ஆளுநரிடம் வழங்கியுள்ளது. இந்த சட்டமானது, அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள இந்தியக் குடியரசின் கூட்டாட்சி அமைப்பு மீதான நேரடித் தாக்குதல் " என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, பாஜக அரசு உண்டாக்கும் இன்னல்களைத் தொகுத்து மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளது:

"ஆளுநர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிரச்னைகளை உண்டாக்குகிறது. மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் பாஜக நிர்வாகிகள் போல் செயல்படுகின்றனர். சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களை பாஜக அல்லாத மற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் மீது பழிவாங்கும் செயலாக தவறாகப் பயன்படுத்துகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதை மோடி அரசு திட்டமிட்டே நிறுத்தி வைக்கிறது. நாட்டின் சொத்துகளை தனியார்மயமாக்குவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். காரணம், அவை இந்திய மக்களுக்கு சொந்தமானது. மத்திய, மாநில அரசுகளின் உறவு சுதந்திர இந்தியா வரலாற்றில் இந்த அளவுக்கு மோசமானதாக இருந்ததில்லை."

கடிதத்தின் இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அவர் தெரிவித்ததாவது:
 
"இவை அனைத்திற்கும் பின்னணியில் தெளிவான திட்டமும் உள்நோக்கமும் உள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இந்தியாவில் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை உருவாக்கவே பாஜக விரும்புகிறது.

ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் மீதான பாஜகவின் தாக்குதல்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்துக்கான நேரம் வந்துவிட்டதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் இந்த விவகாரங்களுக்குத் தீர்வு காண்பது குறித்து திட்டம் வகுக்க வேண்டும்."

Tags : Mamata Banerjee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT