இந்தியா

தில்லியில் நாளொன்றுக்கு 80 ஆயிரம் பரிசோதனைகள்: சத்யேந்தர் ஜெயின்

31st Mar 2021 01:13 PM

ADVERTISEMENT

 

தில்லியில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து நாளொன்றுக்கு 80 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், 

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 992 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதனால் பாதிப்பு விகிதம் 2.7 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

கடந்த இரண்டு நாள்களாக கரோனா சோதனை விகிதம் குறைந்துவிட்ட நிலையில், இன்று முதல் 80 ஆயிரம் சோதனைகள் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

அரசு மருத்துவமனைகளில் ஏராளமான கரோனா படுக்கைகள் உள்ளன. தில்லியில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒட்டுமொத்தமாக 25 சதவீத படுக்கை வசதிகள் உள்ளன. சில தனியார் மருத்துவமனைகளில் ஐ.சி.யூ படுக்கைகள் பற்றாக்குறையாக ஏற்பட்டுள்ள நிலையில், ஐ.சி.யூ படுக்கை வசதிகளை மேலும் அதிகரிக்க உத்தரவிட்டுள்ளோம். 

வியாழக்கிழமை முதல் அடுத்தகட்ட தடுப்பூசி போடப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்கள். தில்லியில் 500 கரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது காலை 9 மணி முதல் இரவு 9 வரை செயல்படும். மக்கள் முன்வந்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளவேண்டும். 

மேலும், தேசிய தலைநகரில் பொது முடக்கம் ஒரு தீர்வு அல்ல என்று சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags : Delhi testing capacity
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT