இந்தியா

ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதி: ஜெய்சங்கர் வலியுறுத்தல்

31st Mar 2021 04:08 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதியை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
 உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் அமைதி நடவடிக்கைகளுக்காக பிராந்திய நாடுகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கியில் "ஆசியாவின் இதயம்' என்ற பெயரில் ஆசிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையேயான முதல் மாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான "ஆசியாவின் இதயம்' 9ஆவது மாநாடு, தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷான்பேயில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த மாநாடு, இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். மாநாட்டில் தான் பேசிய முக்கிய விஷயங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவு:
 ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதியை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு நமக்குத் தேவை, உண்மையான "இரட்டை அமைதி'. அதாவது, உள்நாட்டிலும், ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதிகளில் உள்ள அனைவரின் நலனையும் ஒருங்கிணைக்கும் வகையிலான அமைதியாக அது இருக்க வேண்டும். அமைதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய வேண்டும். அதற்காக நல்ல நம்பிக்கையோடு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் அமைதி நடவடிக்கைகளுக்கான அரசியல் தீர்வை எட்ட முடியும்.
 ஆப்கானிஸ்தானில் பல தசாப்த காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. அதிலிருந்து நாடு மீண்டு வர வேண்டும் என நாம் முயற்சி மேற்கொள்கிறோம். நீண்ட காலத்தை உள்ளடக்கிய கொள்கைகளில் நாம் உண்மையாக இருந்தால் மட்டுமே அது நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெய்சங்கர்.
 மாநாட்டில் பங்கேற்கும் பிற நாடுகளின் தலைவர்களையும் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT