இந்தியா

தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர்

27th Mar 2021 09:37 PM

ADVERTISEMENT

தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை, இந்த தொகுதியில் எதிர்த்து நிற்பவர் யார் என்று உங்களுக்கு தெரியும், தங்க தமிழ்ச்செல்வன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் இரத்தத்தை வியர்வையாக சிந்தி வெற்றி பெற்று விலாசம் பெற்றவர் தங்க தமிழ்ச்செல்வன். அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்று ஜெயலலிதா வாய்ப்பினை கொடுத்தார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர். ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர். இவ்வளவு பதவியும் உங்களால் அவருக்கு கிடைக்கப்பெற்றது. இங்குவந்துள்ள நமது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களின் உழைப்பால் அவர் எம்.எல்.ஏ. ஆனார்.
இல்லையென்றால் அவர் நாட்டுக்கே யார் என்று அடையாளம் தெரியாது. இன்றைக்கு அதையெல்லாம் மறந்து. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துரோகம் விளைவிக்கின்ற இந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். அதுதான் அவருக்கு கொடுக்கின்ற சரியான தண்டனை.
ஏனென்று சொன்னால் “நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லாதது அன்றே மறப்பது நன்று” - என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆகவே அப்படி நன்றி மறந்த அந்த தங்க தமிழ்செல்வன், டெபாசிட் இழக்கின்ற அளவுக்கு, ஓ.பி.எஸ் தமிழகத்திலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வென்றார் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதுதான் நீங்கள் தங்க தமிழ்செல்வனுக்கு கொடுக்கின்ற தண்டனை. ஏனென்று சொன்னால், உங்கள் உழைப்பை எல்லாம் மறந்து, எம்.ஜி.ஆர், திமுக ஒரு தீய சக்தி என்று கூறினார்கள். அந்த கட்சியோடு போய் சேர்ந்துள்ளார். 
எம்.ஜி.ஆர் யாரை எதிர்த்தாரோ, யாரை இந்த பூமியில் இருக்கக்கூடாது என்று நினைத்தாரோ, எந்த கட்சி இந்த தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என எண்ணினாரோ, அவரோடு சேர்ந்து இன்றைக்கு நம்மை எதிர்த்து போட்டியிடுகிறார். இதனை பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எண்ணிப்பார்க்க
வேண்டும். இந்த தேர்தல் மூலமாக தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அதிமுக கொடுத்த விலாசத்தினால் தான் தி.மு.கவில் போய் சேர முடிந்தது. இல்லையென்றால் அவர்கள் சேர்க்கமாட்டார்கள். இது யாருடைய உழைப்பு உங்களுடைய உழைப்பு.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும், மக்களுக்காக உழைத்தார்கள், அதனால் மக்கள் மனதில் இன்றும் தெய்வமாக வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி வீட்டுமக்களுக்காக உழைத்தார். இன்றைக்கு அதிமுக ஒரு எஃகு கோட்டையாக உள்ளது. நமது கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் எங்கேயும் தி.மு.க ஆட்சியில் செய்த சாதனைகளைப் பற்றி கூறுவதே இல்லை.
அதிமுக, அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், என்னைப் பற்றியும், அண்ணனைப் பற்றியும் குறைதான் கூறுவார். அதோடு தேர்தல் பிரசாரத்தை முடித்துவிடுவார். ஆனால், அதிமுக பிரசாரத்தில் நாங்கள் என்ன செய்துள்ளோம், என்ன செய்யப்போகின்றோம் என்பதை கூறி வாக்குகளை சேகரிக்கின்றோம்.
ஸ்டாலின் போகும் இடங்களிலும் பெட்டியை வைத்து பொதுமக்களிடம் குறை கேட்கின்றாராம். ஸ்டாலின் மக்கள் யாருக்காவது குறை இருக்கிறதா என்று கேட்டு குறை இருப்பவர்கள் மனுக்களை பெட்டியில் போடுங்கள் என்று சொல்கிறார். 
மனுக்களை பெட்டியில் போட்டவுடன் பூட்டி, சீல் வைத்து அவர் எடுத்துச்சென்று விடுவாராம். அவர் முதலமைச்சர் ஆனதும் 100 நாட்களில் பெட்டியை திறந்து குறைகளை தீர்ப்பாராம். எவ்வளவு கதை அளக்கிறார் பாருங்கள். யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இவரது அப்பா கருணாநிதி ஐந்து முறை முதலமைச்சர், ஸ்டாலின் துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் அப்பொழுதெல்லாம் இந்த மக்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. மக்களை மறந்து விட்டார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக போடுகின்ற நாடகம் இது. 
ஸ்டாலின் அவர்களே, நீங்கள் முதலமைச்சரானால் தானே அந்த பெட்டியை திறக்க முடியும். ஸ்டாலின், முதலமைச்சர் ஆகப்போவதும் இல்லை, பெட்டியை திறக்கப் போவதும் இல்லை. 2019 நாடாளுமன்ற தேர்தல் ஊர் ஊராக சென்று மனு வாங்கினார். அந்த மனு என்னாயிற்று என்றே தெரியவில்லை. அரசாங்கத்திடமும் கொடுக்கவில்லை. 2019ல் அண்ணா தி.மு.க ஆட்சி, இவர் மனு வாங்கி யாரிடம் கொடுக்க முடியும். ஒரு முறை மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றீர்கள். இனி மக்கள் ஏமாற வேண்டாம் என்றார்.
 

Tags : Edappadi Palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT