இந்தியா

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள்

27th Mar 2021 02:31 PM

ADVERTISEMENT


நாட்டில் கரோனா இரண்டாவது அலை எழுந்துவிடும் சூழ்நிலை நிலவினாலும், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால், நிச்சயம் நிலைமை மோசமடையாது என்று எதிர்பார்க்கலாம்.

அதாவது, கரோனா என்பது ஓராண்டுக்கும் மேலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்தாலும், அதைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினமானதாகவே உள்ளது. 

கரோனா தொற்று குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் அதிகம் தாக்குகிறது. ஆனால் குழந்தைகளை பாதிக்காது என்று கூறிவிட முடியாது, இரண்டாவது முறை கரோனா தொற்றுவதில்லை என்றாலும், நிச்சயமாக அதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்ற நிலைதான் இன்றும் நீடிக்கிறது.

அதுபோலவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நிச்சயமாக கரோனா தொற்று வராது என்று சொல்லிவிட முடியுமா என்றால், அதுவும் நிச்சயமில்லை. வரும், ஆனால் பாதிப்பு அதிகமாக இருக்காது, அந்த தொற்றை எப்படி கைகொள்வது என்று தடுப்பூசி காரணமாக நமது உடல் முன்கூட்டியே அறிந்திருக்கும் என்பதுதான் நிதர்சனம்.

ADVERTISEMENT

சரி... நேராக விஷயத்துக்கு வரலாம்.. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட என்ன அபாயம் உள்ளது என்று பார்க்கலாம்.

அதுமட்டுமல்ல, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் செய்யக் கூடாத தவறுகள் என்னவென்று பார்க்கலாம்..

முதல் விஷயம், தடுப்பூசி போட்டுக் கொண்டோம், இனி நமக்கு கரோனா வராது என்ற மனநிலையைக் கைவிடுங்கள். முன்பு எப்படி விழிப்புணர்வோடு செயல்பட்டீர்களோ அப்படியேதான் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டபிறகு, சரியான இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட குறிப்பிட்ட சதவிகிதத்தினர், இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை என்கிறது புள்ளி விவரங்கள். அது தவறு.

அதுபோல, இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எனவே, அதுவரை மிகக் கவனத்துடன்தான் இருக்க வேண்டும். அதற்குப் பிறகும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

அதாவது, நாம்தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டோமே.. ஏன் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற எண்ணம் கூடவே கூடாது. முகக்கவசம் என்பது கரோனா தொற்றிலிருந்து காக்கும் உயிர்க்கவசம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், கரோனா தொற்று என்பது இந்த உலகை விட்டு ஒழியும் வரை நிச்சயம் முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுவிடங்களுக்குச் செல்வது நன்மை பயக்கும்.

சரி.. ஏற்கனவே எனக்கு கரோனா வந்துவிட்டது. இரண்டாவது முறை கரோனா வராது என்று சொல்கிறார்களே.. பிறகு ஏன் நான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்காதீர்கள்.

ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே கரோனா வந்துவிட்டாலும்கூட நிச்சயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வேளை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், கரோனா வராதவர்களைப் போலவே நீங்களும் தொற்று பாதிப்புக்குள்ளாகும் அபாயம் கொண்டவராகவேக் கருதப்படுவீர்கள். அதாவது மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், கரோனா வந்தவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்போது, அவருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். எனவே, தடுப்பூசி அவசியம்.

ஆனால், மிகச் சமீபத்தில்தான் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், குறைந்தது 1 மாதத்துக்குப் பிறகு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அது உங்களுக்கு நீண்ட காலப் பயனை அளிக்கும்.

பயணங்களில் அலட்சியம் கூடாது..

நாம்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டோமே என்று தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதும், பயணங்களின் போது மிக அஜராக்ரதையாக இருப்பதும் கூடாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும், பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியம். ஏனெனில் உருமாறிய புதியவகை கரோனா பரவி வருகிறது. உங்களைப் போலவே மற்றவர்களும் அலட்சியத்துடன் இருந்தால் நிச்சயம் அதனால் இரண்டாம் அலை எழுவதைத் தவிர்க்க முடியாது.

இடைவெளி.. வேண்டும் சமூக இடைவெளி

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது, நமது குடும்பத்துடன் ஒற்றுமையாக பாதுகாப்பாக வாழவேதான்.. அதில்லாமல், பெருங்கூட்டங்களில் கலந்து கொள்ள அல்ல. எனவே, எங்குச் சென்றாலும் சமூக இடைவெளியை நிச்சயம் பின்பற்றுங்கள்.. 
 

Tags : India coronavirus Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT