புது தில்லி: தில்லி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் "தில்லி தேசியத் தலைநகர்ப் பகுதி சட்டத் திருத்த மசோதா - 2021', மாநிலங்களவையிலும் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் நடத்திய அமளியால் அவை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது, மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்லாமல், காங்கிரஸ், திமுக, சமாஜவாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி பேசுகையில், "இந்த மசோதாவில் யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் அளிக்க திருத்தம் கொண்டு வரப்படுகிறது. தில்லி அரசின் நிர்வாகம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் துணைநிலை ஆளுநரின் கருத்தைப் பெற வேண்டியது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்க்கிறோம்' என்றார். மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினர் வில்சன் பேசுகையில், "இந்தச் சட்டத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது' என்றார்.
இறுதியில் மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 83 உறுப்பினர்கள் வாக்களிக்கத்தனர். 45 உறுப்பினர்களே எதிர்த்து வாக்களித்தனர். இதையடுத்து, மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.